தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வதந்தி வீடியோ
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு, பீகார் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்ததன. அதோடு, தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கடி எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு:
தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளி தாக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளார் பிரசாந்த் உம்ரா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இவரை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றம் -மனு
அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.
தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 10 நாட்களுக்குகள் (மார்ச், 20- ஆம் தேதிக்குள்) ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிவாரணத்தைக் கோரலாம் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மித் சிங் தெரிவித்திருந்தார்.
ஜாமீன் வழங்க மறுப்பு:
இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (மார்ச், 14) விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் வீடியோ சித்தரிப்பு செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, முன்ஜாமீன் கோரிய வழக்கை மார்ச் 17- ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.