இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது.


பாஜக தலைவர்கள் தொடர் சர்ச்சை:


முதற்கட்ட தேர்தல் நிறைவு பெற்றதில் இருந்தே பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என பலரும் சர்ச்சைக்குரிய விதமாக பேசுவது தொடர் கதையாகி வருகிறது.


குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்துகள் வெறுப்பை தூண்டும் விதமாக இருப்பதாக பூகார் எழுந்தன. இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசினார்.


இதையடுத்து, மாட்டிறைச்சி தொடர்பாக பேசி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.


"நேரு இருந்திருந்தால் அழுதிருப்பார்"


பிரியங்கா காந்தி, தாலியை கூட அணிவதில்லை என்றும் அவரின் தாத்தா நேரு இருந்திருந்தால் இதை நினைத்து அழுதிருப்பார் என்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் கூறியுள்ளார். குணா மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "நம்முடைய மரபுப்படி, மகளுக்குத் திருமணம் ஆனவுடனேயே, தன் பெயருக்குப் பின்னால் மாமனார் வீட்டின் குடும்பப் பெயரைச் சேர்த்துக்கொள்வார்.


ஆனால், பிரியங்கா (பிரியங்கா காந்தி) எப்படி காந்தி ஆவார்? அவர்கள் அனைவரும் போலி காந்திக்கள். அவர்கள் காந்தியின் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிக்க விரும்புகிறார்கள்" என்றார்.


 






மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மற்றும் விலை மதிப்பற்ற பொருள்களை சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கும் அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் கொடுக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். இதற்கு பதிலடி அளித்த பிரியங்கா காந்தி, தனது தாயார் சோனியா காந்தி நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தவர் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையும் படிக்க: "அடுத்த ஜென்மத்தில் வங்க தாயின் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்" - பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!