இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹிராபாவின் நூறாவது பிறந்தநாள் வரும் ஜூன் 18 அன்று கொண்டாடப்படும் நிலையில், குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காந்தி நகர் மேயர் ஹிதேஷ் மக்வானா, `ஹிராபா தற்போது 100 வயதை அடைந்திருப்பதால், அவரது பெயரை ரய்சான் பகுதியில் அமைந்திருக்கும் 80 மீட்டர் சாலைக்கு பூஜ்ய ஹிராபா மார்க் என்று பெயர் சூட்டுகிறோம்.. வரும் தலைமுறையினர் அவரது வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெற வேண்டும் என இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காந்தி நகர் மாநகரத்திற்கு வெளியில் புறநகர்ப் பகுதியில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் வசிக்கிறார் ஹிராபா. இந்தப் பகுதி பாஜகவால் ஆட்சி செய்யப்பட்டும் காந்தி நகர் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட பகுதியாகும்.
`1923ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஹிராபா பிறந்தார். வரும் ஜூன் 18 அன்று அவர் தனது வாழ்வின் நூறாவது ஆண்டை எட்டவுள்ளார்’ எனப் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி கூறியுள்ளார்.
வரும் ஜூன் 18 அன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி தனது தாயைச் சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாள் பயணமாக வரும் ஜூன் 18 அன்று, பிரதமர் மோடி பாவகத் கோயிலைச் சுற்றுப் பயணம் மேற்கொள்வதுடன், வதோதராவில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றவுள்ளார்.
மேலும், அதே நாளில் மோடியின் குடும்பம் அகமதாபாத்தில் உள்ள ஜகந்நாத் கோயிலில் அன்னதானம் வழங்குகின்றனர். மேலும், வட்நகர் பகுதியில் உள்ள ஹட்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் பிரதமரின் தாய் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் குஜராத் சென்ற போது, தனது தாயைச் சென்று பிரதமர் மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்