மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி செயலர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வழங்கினார். தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாநாட்டிற்கு 50,000 நிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டத்தில், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசியதாவது: 




திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பூங்கொத்து, பொன்னாடை வழங்குவதற்கு பதிலாக புத்தகங்களை வழங்கலாம் அல்லது அந்தத் தொகையை மாநாட்டுக்கு நிதியாக தாருங்கள். நான் அமைச்சராக பொறுப்பேற்ற 8 மாதங்களில் நான்கு முறை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்துள்ளேன். மயிலாடுதுறை மாவட்டம் திமுகவின் கோட்டை, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிரச்சாரத்துக்கு வந்த என்னை கைது செய்த போலீசார் தற்போது எனக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.




தொகுதிக்கு இலக்கு நிர்ணயம் செய்து இளைஞர் அணியினரை சேர்க்க உத்தரவு பிறபிக்கப்பட்டது. அதை இந்த மாவட்டம் மட்டும் தான் சரியாக செய்துள்ளது. திமுக இளைஞர் அணி சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கு செயல்வீரர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்விற்கு எதிராகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும், ஆளுநரை கண்டித்தும் இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தியது. இப்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தாமல் என்னை பார்த்து கேள்வி கேட்கிறார்கள். 




இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் நீட் நுழைந்து விட்டது. ஆனால் கலைஞர் இருந்த வரை நீட் நுழையவில்லை. ஏன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை கூட நீட் நுழையவில்லை. அவர் மறைந்தார். அதன் பின்னர் பாஜகவின் அடிமைகளை வைத்து கொண்டு தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நீட் தேர்வை நுழைத்து விட்டது. அரியலூர் அனிதா தொடங்கி இன்று வரை எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஒன்றிய அரசு கொலை செய்து விட்டது. நீட் தேர்வு ஆகியவைகளுக்கு எதிராக அதிமுக கண்டனம் தெரிவிக்கலாம். உங்களுக்கு கண்டனம் தெரிவிக்க கூட பயமாக இருந்தால் வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் அதை விட்டு எங்களை பார்த்து கேள்விகள் கேட்கிறீர்கள். 




மதுரையில் மாநாடு எப்படி நடந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்தது. அங்கு என்ன பேசினார்கள். சமையல் எப்படி இருந்தது என்று தான். மதுரை மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக பேசி இருக்கலாமே. மதுரை மாநாட்டில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகி காவல் நிலையத்தில் மாநாட்டிற்கு அழைத்து வந்த எனது மனைவியை காணவில்லை என புகார் செய்துள்ளார். போலீசார் முதலில் கூப்பிடப்போவது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணனை தான் மாநாட்டிற்கு பொறுப்பில் இருந்தார். நான் ஒன்றும் தப்பாக சொல்லவில்லை அப்படி நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல என்று கேலியாக பேசினார். சட்டசபையில் உள்ள 230 எம்எல்ஏக்கள் நீட் தேர்விற்கு எதிராக இருக்கும் போது பாஜகவின் அடிமையாக இருக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனர். நான்  அதிமுகவினரிடம் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம். அதிமுக இளைஞர் அணி நிர்வாகிகளை அனுப்புங்கள் அனைத்து கட்சியினருடன் டெல்லி சென்று நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லுவோம். ஒருவேளை நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தால் அதன் பெருமையை அதிமுகவிற்கே சேரும் என்று கூறினேன்.


 




ஆனால், அதற்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. அதிமுகவும் நீட் தேர்வை எதிர்க்கும் என்றால் இதற்கு முன் வரவேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நான் வாக்குறுதி கொடுத்தது உண்மைதான்  ஆனால்  ஒரு உதயநிதி ஸ்டாலின் இல்லை நீங்கள் அனைவரும் நீட்க்கு எதிராக முன்வரவேண்டும், திமுக நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுகொண்டுள்ளது. நான்  கடந்த 9 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்த பாஜக அரசின் ஊழல் பட்டியலை சிஏஜி(இந்திய தலைமை  தணிக்கை குழு) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 1கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி, மத்திய அரசின் மருத்து காப்பீட்டு திட்டத்தில் ரூ.88 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளது. ரமணா படத்தில் மருத்துவத்தில் எப்படி முறைகேடு நடக்கிறது என்பதை பார்த்தோம். ஆனால் இன்று உண்மையாக நடந்துள்ளது. பாரத் மாலா திட்டத்தில் ரூ.7 கோடி ஊழல் என் பட்டியல் வந்து கொண்டு இருக்கிறது.




மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்றார். ஏன் என்று கேட்டதற்கு இந்தியாவின் கருப்பு பணம் ஒழிக்க என்றார். ஒவ்வொருவர் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறிய பணம் என்ன ஆனது. இன்று வரை ரூ.15 கூட வரவு வைக்கவில்லை. கொரோனா காலத்தில் பிரதமர் நிதி என்ற பெயரில் திரட்டப்பட்ட தொகை என்ன ஆனது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால் அதற்கு உரிய பதில் தரப்படவில்லை. இவ்வாறு இரண்டு கொள்ளையர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றார். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.