மயிலாடுதுறை: தமிழக அரசியலில் பாஜகவின் வியூகம், நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் விரிவான பேசியுள்ளார். அப்போது அவர் பல்வேறு அரசியல் ஆருடங்களை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அரசியல் ஆட்டம்: அதிமுகவுக்கு எச்சரிக்கை
பாஜகவின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய தமிமுன் அன்சாரி, "பாஜக இன்று அதிமுகவுடன் உறவாடுவது போல நடித்து, அந்தப் பேரியக்கத்தைக் கெடுத்து வருகிறது. அவர்களின் உண்மையான திட்டம், நடிகர் விஜய்யை வளரவிட்டு, அதன் மூலம் அதிமுகவை முழுமையாக அழிப்பதுதான். அதிமுக அழிந்த பிறகு, விஜய்யைக் கட்டுப்படுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வல்லமை கொண்ட தலைமை திமுகவிடம் மட்டுமே இருப்பதால், நாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம்.
விஜய் குறித்துக் கேள்விகள்
நடிகர் விஜய் குறித்தும், அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பு: ஜனநாயக நாட்டில் கட்சித் தொடங்கிய எவரும் குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும். ஆனால், விஜய் இன்றுவரை செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? இது ஒரு கட்சித் தலைவருக்கு அழகா?
* கொள்கை முரண்: ஈரோடு கூட்டத்தில் திமுகவைத் தீய சக்தி என விமர்சித்த விஜய், தனது கொள்கை எதிரி என்று சொல்லும் பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை?
* காந்தி பெயர் நீக்கம்: மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டது குறித்து விஜய் ஏன் வாய் திறக்கவில்லை?
* அரசியல் முதிர்ச்சி: அரசியல் களத்தையும், மக்களின் மனநிலையையும் விஜய் இன்னும் ஆழமாகப் படிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் குளறுபடி: 66 லட்சம் பேர் எங்கே?
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்துப் பேசிய அவர், வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார். குறிப்பாக, 66 லட்சம் பேருக்குச் சரியான முகவரி இல்லை என்று கூறப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும், இது குறித்து முழுமையான விவரங்கள் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மற்றும் சீமான் குறித்து..
திருப்பரங்குன்றத்தில் நிலவும் சூழல் குறித்துப் பேசிய அவர், அங்கு சிக்கந்தருக்கும் முருகனுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை; மக்கள் ஒற்றுமையாகவே உள்ளனர். வெளியூரில் இருந்து வந்தவர்கள்தான் திட்டமிட்டுப் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். தவறான பரப்புரையால் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்தது வேதனையளிக்கிறது. தமிழகத்தை ஒருபோதும் வடமாநிலமாகவோ அல்லது குஜராத்தாகவோ மாற்ற முடியாது. மேலும், சீமான் குறித்துப் பேசுகையில், அவர் இன்னும் ஆட்சி அதிகாரத்தை நோக்கி வரவில்லை என்பதால் எதைப் பற்றியும் அழுத்தமாகப் பேசுகிறார் என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மாவட்டக் கோரிக்கைகள்
திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதால் வடஇந்தியர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குறித்துப் பேசுகையில்
* புதிய பேருந்து நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும்.
* பாதாளச் சாக்கடை சீரமைப்புப் பணிகளை முடிக்க வேண்டும்.
* காவேரி நகர் ரயில்வே மேம்பாலப் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் முகமது நபீஸ், அவைத்தலைவர் தாஜூதீன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.