பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த தண்ணீர் பம்பை பிடுங்கி எடுத்து சென்றது தொடர்பாக விளக்கம் கேட்ட திமுக ஐடிவிங் நிர்வாகி மற்றும் சேர்மேனை கொச்சை வார்த்தைகளால் வசைபாடிய அதிமுகவை ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்புறப்படுத்தப்பட்ட குடிநீர் பம்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சென்னியநல்லூர் ஊராட்சி வீரன் கோயில் வளாகத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தண்ணீர் பம்பு இருந்துள்ளது. அதில் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அதனை ஊராட்சி போர்மேன் அழகர் என்பவர் தண்ணீர் பம்பினை அங்கிருந்து அகற்றுவதற்காக தீடீரென சென்றுள்ளார்.
கோரிக்கை வைத்த திமுக நிர்வாகி
அப்போது பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் தண்ணீர் பம்பை ஏன் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றினாலும் அதனை வேறு பகுதியில் அமைத்து தரவேண்டும் என அவ்வூர் திமுக ஐடிவிங் நிர்வாகி சதீஷ் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி போர்மேனிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு போர்மேன், ஊராட்சி மன்ற தலைவரிடம் ஆலோசித்து மாற்றி தருவதாக தெரிவித்து, அங்கிருந்த தண்ணீர் பம்பை அப்பகுதியில் இருந்து பிடுங்கி எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அந்த பம்பினை வேறு இடத்தில் அமைந்து தராததால் ஊராட்சி போர்மேனிடம் தொடர்பு கொண்டு சதீஷ் கேட்டுள்ளார். அதற்கு தண்ணீர் பம்பை ஊராட்சி மன்ற தலைவி புவனேஸ்வரியின் கணவர் பண்ணை என்கின்ற ராஜசேகர் பிடுங்கி எடுத்து வரத்தான் சொன்னார். மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக நீங்கள் அவரிடம் தான் பேச வேண்டும் என சதீஷிடம் கூறியுள்ளார்.
திமுக - அதிமுக நிர்வாகிக்கு இடையே வாக்குவாதம்
அதனைத் தொடர்ந்து சதீஷ் அதிமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ராஜசேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ராஜசேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் நான்கு தலைமுறைகளாக திமுகவில் இருந்து என்ன செய்தீர்கள் என கேட்டு? கொச்சை வார்த்தைகளால் சதீஷை வசை பாடியுள்ளார். மேலும் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்து வரும் மகேந்திரனையும் அவதூறு வார்த்தைகளால் பேசி இருவரும் நேரில் வாருங்கள் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Medical Staff Vacancy : மருத்துவத் துறையில் 26 காலி பணியிடங்கள் - முழுவிபரம் இதோ...!
காவல்நிலையத்தில் புகார் மனு
இது தொடர்பான ஆடியோ ஆதாரத்துடன் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் மற்றும் திமுக ஐடிவிங் நிர்வாகி சதீஷ் ஆகிய இருவரும் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அம்மனுவில் ஊராட்சி மன்ற தலைவியின் பதவிக்காலம் முடிய இருப்பதால் தங்களது ஊராட்சியில் உள்ள அனைத்து தண்ணீர் பம்பையும் எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஈடுபட்டு இருப்பதாகவும், இதுகுறித்து கேட்டபோது மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளதால் ராஜசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு வழங்கியுள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு
இதனை அடுத்து, குத்தாலம் காவல்துறையினர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான ராஜசேகரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். திமுக நிர்வாகிகளின் புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் குத்தாலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.