பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியானது, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்படுகிறது. அதில் பிரதமர் மோடி, இந்திய குடிமக்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் வானொலி வாயிலாக உரை நிகழ்த்துகிறார். பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியின் 113வது பதிப்பு ஆகஸ்ட் 25 இன்று ஒளிபரப்பப்பட்டது.
”தேசிய விண்வெளி தினம்”:
மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையானது ,” எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.
அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களுக்கு அழைப்பு
மேலும், அரசியல் பின்புலம் ஏதும் இல்லாத ஒரு இலட்சம் இளைஞர்களை, அரசியலமைப்போடு இணைப்பது குறித்த விஷயமாக, இந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்னுடைய இந்த விஷயம் குறித்து நிச்சயம் எதிர்வினை ஏற்பட்டிருப்பதை அறிகிறேன். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்பதுதான். அவர்கள் அதற்காக சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயம் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பலமான பதிலுரைகள் கிடைத்திருக்கின்றன. பலவகையான ஆலோசனைகளை மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள். தங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.
தாத்தா அல்லது தாய்-தந்தை என எந்த உறவும் இல்லாத காரணத்தால், விரும்பியும் கூட அவர்களால் அரசியலுக்கு வர இயலவில்லை. கள அளவில் பணியாற்றிய நல்ல அனுபவம் தங்களிடம் இருப்பதால், பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண்பதில் உதவிகரமாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள். குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகளால் நமது ஜனநாயகம் மேலும் பலமடையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தங்கள் ஆலோசனைகளை அளித்த அனைவருக்கும் நான் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நமது சமூக அளவிலான முயற்சிகளால், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இத்தகைய இளைஞர்கள் அரசிலுக்குள் பிரவேசிப்பார்கள், அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய உற்சாகம் ஆகியன தேசத்திற்குப் பயன்படும்.
”தேசத்தின் எதிர்காலத்தை மாற்றவல்லது”
சுதந்திரப் போரின் போது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பலர் முன்வந்து பங்கேற்றார்கள், இவர்களுக்கு எந்த விதமான அரசியல் பின்புலமும் இருக்கவில்லை. இவர்கள் தாங்களே முன்வந்து பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தார்கள். இன்றும் கூட வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, மீண்டும் ஒருமுறை இதே உணர்வு தேவைப்படுகிறது. நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் என்னுடைய அனைத்து இளைய நண்பர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். உங்களுடைய இந்த அடியெடுப்பு, உங்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்ற வல்லது என பிரதமர் மோடி தெரிவித்தார்.