இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நீண்ட வரலாறு கொண்டது. கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தந்த காலத்தில் அக்கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் பிரிந்துச் சென்றோ அல்லது கட்சியால் நீக்கப்பட்டதன் காரணமாகவோ புதிய கட்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். அவற்றில் பல தலைவர்கள் ஜொலித்தும் இருக்கிறார்கள். யார் அவர்கள், காங்கிரசிலிருந்து விலக என்ன காரணம்? பார்க்கலாம்.
மம்தா பானர்ஜி:
ஐ.கே குஜ்ரால் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாரானது இந்தியா. 1998ல் நடைபெற இருந்த தேர்தலிலின்போது காங்கிரசில் எம்.பியாக இருந்த மம்தா பானர்ஜிக்கு மீண்டும் சீட் கிடைப்பதே கடினம் என்கிற சூழல் உருவானது. இந்நிலையில் தான் ஓரங்கட்டப்படுவதாக நினைத்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே அக்கட்சியை வெளிப்படையாக விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். இப்படி கட்சிக்குள் இருந்த பல்வேறு முரண்கள், பிளவுகள் காரணமாக கட்சியை விட்டு விலக நினைத்தார். அப்போது 1997 டிசம்பரில் காங்கிரசிலிருந்து அவர் நீக்கப்பட்டார். தொடர்ந்து ஒரே மாதத்தில் 1998 ஜனவரியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.
தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தன் தொகுதியில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வாக்குகளைப்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாஜகவுடன் வைத்த கூட்டணியின் காரணமாக 1999-ல் இந்தியாவின் முதல்பெண் ரயில்வே அமைச்சரானார். தொடர்ந்து 2011ல் முதன்முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
ஜெகன்மோகன் ரெட்டி:
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும் ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ராஜசேகர் ரெட்டியின் கோரமான இறப்பின் காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நினைத்த ராஜ சேகர் ரெட்டியின் மகன் ஜெகன் மாநிலம் முழுவதும் ஒரு பயணத்தை மேற்கொண்டார்.
அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அந்தப் பயணத்தைக் கைவிட வேண்டுமென காங்கிரஸ் மேலிடத்திலிருந்து அவருக்கு உத்தரவு பிறந்தது. ஆனால், ஜெகன், இது தன்னுடைய தனிப்பட்ட விவகாரம் என தெரிவித்து அந்த பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 2010ம் ஆண்டு தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 45 நாட்களுக்குள் புதியதொரு கட்சியை நிறுவப்போவதாகவும் அறிவித்தார்.2011ம் ஆண்டு 'ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி' எனும் புதிய கட்சியை தொடங்கினார்.
2012ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் காரணமாக ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டார். இதன்பிறகு 2013 ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. தொடர்ந்து 2014ம் ஆண்டில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முதல் தேர்தலை சந்தித்தது. ஆனால், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களை மட்டுமே வென்றது. பின்னர் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
சரத் பவார்:
சரத் பவார் மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர். வாஜ்பாயின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நேரத்தில் சோனியா காந்தி தான் பிரதமராக விரும்பிய நிலையில் அவரை விட மன்மோகன் சிங்கோ அல்லது தான்தான் அதற்கு தகுதி வாய்ந்தவர் என கட்சி மேலிடத்தில் வலியுறுத்தியிருக்கிறார் சரத் பவார்.
காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தியாவில் பிறந்த ஒருவரே பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி அல்ல எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதே ஆண்டிலேயே தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் தலைவரானார். தற்போது மஹராஷ்டிராவில் சிவசேனாவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி முக்கிய கூட்டணி கட்சியாக உள்ளது.
ஹிமாந்த பிஸ்வா சர்மா:
அசாம் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஹிமாந்த பிஸ்வா சர்மா. சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக 2015ல் காங்கிரசில் இருந்து விலகிய சர்மா, பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தியின் தவறான நிர்வாகமே காரணம் என்று காரணம் சொன்னார். வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற உத்தி வகுக்க பாஜக-வுக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார். தற்போது அசாம் முதல்வராகவும் பாஜகவில் முக்கிய தலைவராக உள்ளார். .
ஜோதிராதித்ய சிந்தியா:
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் குடும்பம் ஒரு செல்வாக்கான பாரம்பரிய அரசியல் குடும்பம். இவர் 2004, 2009 மன்மோகன் சிங் ஆட்சியில் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2013 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் 58 இடங்களை மட்டுமே வென்றிருந்த காங்கிரஸ், 2018 தேர்தலில் 114 இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்ற ஜோதிராதித்ய சிந்தியா முக்கியப் பங்காற்றினார். முதல்வராகவும் கனவோடு இருந்த அவருக்கு பதிலாக கமல்நாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சிந்தியாவுக்கு பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.
அதுத்தவிர காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி வெளியேறியது இளம் தலைவர்களை சோர்வாக்கியுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் எம்.பி பதவியாவது வேண்டும் என்று அவர் விரும்பினார். உட்கட்சி பூசல்களின் காரணமாக அதுவும் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலில்தான் பாஜக நோக்கி நகர்ந்திருக்கிறார். காங்கிரஸுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக பார்க்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்ததோடு மட்டுமல்லாது நல்ல செல்வாக்கான எதிர்காலத் தலைவர் ஒருவரையும் காங்கிரஸ் இழந்துவிட்டதாக சொல்லப்பட்டது.
தமிழ்நாட்டில்...
அதேபோல தமிழ்நாட்டிலும் வெவ்வேறு காலங்களில் காங்கிரசிலிருந்து விலகி ராஜாஜி, பழ.நெடுமாறன், குமரி அனந்தன், சிவாஜி கணேசன், வாழப்பாடி ராமமூர்த்தி, ப.சிதம்பரம், மூப்பனார், ஜி.கே வாசன் ஆகியோர் தனிக்கட்சி தொடங்கினார்கள் என்பதும் அதில் பலர் மீண்டும் அதே கட்சியில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநில முதல்வராக எட்டு ஆண்டுகள் பதவி வகித்த கேப்டன் அம்ரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவர் புதிய கட்சி தொடங்க இருக்கிறாரா அல்லது வேறேதேனும் தேசிய கட்சியில் இணைய இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.