தமிழ்நாட்டில் புதியதாகப் பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும்  ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 9  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். மேலும் வாக்குப் பதிவு செய்யப்படும் நாள் உள்ளிட்ட தேர்தல் அறிவிப்புகள் மாநில  தேர்தல் ஆணையத்தால் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார்.



அவர்களுக்கு விஜய் தெரிவித்த கருத்துக்கள் பகிரப்பட்டது. தேர்தல் வியூகம், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியோடு அந்த கூட்டத்தில் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். துவக்கமே கோலகலமாக துவங்கியிருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் வரவாக களமிறங்கியிருக்கிறது. அதன் பாய்ச்சலையும், தாக்கத்தையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 



இது குறித்து  விஜய் மக்கள் இயக்கம் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் 'விஜய் அன்பன் கல்லானை' நம்மிடம்...," தளபதி அரசியலுக்கு வரவேண்டும் என்பது தான் அனைவரதும் பொதுவான ஆசை. சினிமாவில் அவர் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் அதில் பயணம் செய்து கொண்டு அரசியலில் ஈடுபடுவது சவாலாக இருந்து வருகிறது. இருப்பினும் தளபதி மக்கள் பணி ஆற்றுவது அவசியமான ஒன்றாக உள்ளது. அவர் அரசியலில் ஈடுபடுவது தமிழ்நாடு மக்களுக்கு நன்மையை சேர்க்கும். கடந்த முறையே தேர்தலில் ஈடுபடுவது குறித்து கருத்துக்கள் இருந்தது. ஆனால் தளபதி அவர்கள் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது மாநில பொதுச் செயலாளர் மூலம் அனுமதி கிடைத்து சாத்தியமாகியுள்ளது.  உள்ளாட்சி தேர்தல் என்பதால் சுயேச்சை சின்னங்கள் தான் அதிகமாக இருக்கும். அதனால் போட்டியில் எளிமையாக வெற்றியடைய முடியும். நிர்வாகிகளும் ’எங்களால் பலரையும் உருவாக்க முடியும்’ என தெரிவித்துள்ளனர்.



எனவே தளபதி தன்னுடைய முகத்தையும், கொடியையும் பயன்படுத்த அனுமதித்துள்ளார். நேரடி குரல் கொடுத்து ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், அவர் மக்களின் அன்பை பெற்றவர் என்பதால் அவரின் அன்பை வைத்தே ஒரு பிராமாண்ட வெற்றியை உறுதி செய்யமுடியும். இது ஒரு பெறும் முயற்சி, இதில் கண்டிப்பாக வெற்றியை காண வாய்ப்புள்ளது. எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் என்றாலும் சிறிய தடுமாற்றம் இருக்கும். 9 மாவட்டம் என்பதால் எளிமையாக வெற்றியடைய முடியும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு கரம் நீட்டப்படும். மக்கள் பணி செய்ய எங்கள் இயக்கத்திற்கு  இந்த தேர்தல் மிகப்பெரும் மாற்றமாக இருக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.