மிகப்பெரிய தோல்விக்குப் பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றமில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியுள்ளார் அதன் துணைத் தலைவர் மகேந்திரன்.


நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு பிறகு, நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர். மகேந்திரன், எம். முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.





"மிகப்பெரிய தோல்விக்கு பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி. தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி நிர்வாகிகள் பதவி விலகினோம்" என்று துணைத்தலைவர் மகேந்திரன் கூறினார். ஒரே ராஜினாமாவில் ஒட்டுமொத்த மநீம கூடாரத்தையும் அசைத்திருக்கும் இந்த மகேந்திரன் யார்?


யார் இந்த மகேந்திரன்? எப்படி மநீம வந்தார்?


பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன், எம்பிபிஎஸ் படித்து முடித்து 30 ஆண்டுகள் மருத்துவ தொழில் செய்து வந்தவர். மேலும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், விவசாயத்தின் மீது தனியாத ஆர்வம் கொண்டு பயிர்வகையை ஏற்றுமதி  செய்துவருகிறார்.  சமூகம் சார்ந்த பிரச்னைகளைக் களைவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மகேந்திரன், தானாகவே முன்வந்து மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.  இவரின், ஆர்வமிக்க செயல்பாடுகளை கவனித்து வந்த கமல்ஹாசன், அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை கொடுத்தார்.


அத்துடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார். அதற்கேற்றார்போல, அங்கு 1.44 லட்சம் வாக்குகள் பெற்று  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில், 28,634 வாக்குகள் சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து கிடைத்தது. இதன்காரணமாக, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டார். கோவை தொகுதியில் மகேந்திரன் பெற்ற வாக்குகளே, கோவை தெற்கில் கமல்ஹாசனை போட்டியிட வைத்தது. ஆனால், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கடைசி வரை வானதி சீனிவாசன் உடன் போராடிய கமல், 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது.




இதன்பிறகும், கட்சியை சீரமைப்பதற்காக பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கமலுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கருதப்பட்ட மகேந்திரன் கட்சியின் விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதைவிட கமல்ஹாசன் மீது அவர் குற்றம்சாட்டியது அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.


பதிலுக்கு, மகேந்திரன் ஒரு துரோகி, தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்துக்கொண்டு புத்திசாலிதனமாக விலகிக்கொண்டார் என்றும், ஒரு களையே தன்னைக் களை என்று புரிந்து கொண்டு தனக்குத் தானே நீக்கி கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.


அதிமுக, திமுகவுக்கு மாற்றுக்கட்சியாக பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தான் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, இப்படி ஆகி கொண்டிருப்பதும், அக்கட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திரன் விலகி இருப்பதும் எதிர்காலத்தில் அக்கட்சி நிலைக்குமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.