இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று (மே 9) பதவி விலகினார். சர்வதேச அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அண்ணனும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, பதவி விலகல் கடிதத்தை தம்பியும் அதிபருமான கோத்தபய ராஜபக்சவிடம் கொடுத்துள்ளார். அவர் கடிதத்தை ஏற்றாரா என்ற தகவல்கள் வெளியாகாத நிலையில், பிரதமரின் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல கொழும்பு பகுதியில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது இலங்கை முழுவதிலுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் கூட்டங்களில், அதிபருக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 


முன்னதாக இலங்கையில் பொருளாதார அவசர நிலையால், நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தன. 




வெடித்த வன்முறை


முன்னதாக இன்று (மே 9) காலை எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் போராட்டக்காரர்கள் இணைந்து இலங்கை நாடாளுமன்றம் முன்பாக பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தைக் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன.


இதற்கிடையே மக்கள் மீதான தடியடிக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்கியது தவறு என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார். 


இந்நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று (மே 9) பதவி விலகினார். சர்வதேச அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 




அடுத்தது என்ன?


நாளை அல்லது நாளை மறுநாள் இடைக்கால அரசை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.


’இடைக்கால அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். ஆனால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது’ என்று சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். 


இதற்கிடையே மகிந்த ராஜபக்சே தன்னுடைய கட்சியில் இருந்தே ஒருவரைப் பிரதமராக நியமிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்துத் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இலங்கை எம்.பி. சுமந்திரன், ’’வன்முறையைத் தூண்டியதற்காகப் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும். மகிந்த ராஜபக்சே சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். 


1 மாத காலத்துக்கும் மேலாக அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதற்காகவே அவர் கைது செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு நின்றுவிடாது. உடனடியாக அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும்.


இடைக்கால அரசு இனி சரிவராது. இன்று நடந்த கலவர நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, இடைக்கால அரசு ஒத்துவராது. அண்ணன் - தம்பி இருவரும் பதவி விலகிய பிறகு காபந்து அரசு நிறுவப்பட வேண்டும். தேவைப்பட்டால் தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டும்’’ என்று இலங்கை எம்.பி. சுமந்திரன் தெரிவித்தார், 


பொருளாதார அவசர நிலையில், இடைக்கால அரசு அமைந்தால்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியது நினைவுகூரத்தக்கது.