கடந்த  ஆட்சியில் மத்திய அரசுடன் கடைசிவரை இணக்கமாகவே இருந்தது அ.தி.மு.க. அரசு. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால் திட்டங்களும், நிதியும் கிடைத்ததோ இல்லையோ மத்திய அரசு தான் தமிழ்நாட்டில் செய்ய வேண்டியவற்றை அதிமுக அரசு மூலம் சாதித்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.


குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டுப் பணிகளில், மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவரை புகுத்தியது, வேளாண் மற்றும் சி.ஏ.ஏ. சட்டங்களுக்கு ஆதரவாக பேசவைத்தது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே எதிர்த்த நீட் தேர்வை கொண்டு வந்தது, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது என்று சொல்லிக்கொண்டே போகலாம். மாநில சுயாட்சிக்குப் பெயர்பெற்ற தமிழ்நாடு அதன் உரிமைகளை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து ஒவ்வொன்றாக தாரைவார்த்தது என்று கடுமையாக விமர்சித்தனர் அரசியல் விமர்சகர்கள். இப்படியான சூழ்நிலையில் தான் ஆட்சிக்கு வந்தது தி.மு.க.




தி.மு.க.வும், அ.தி.மு.க. வழியையே பின்பற்றும் என்று பலர் பேசினர். ஆனால், கொள்கை அளவிலேயே மத்திய அரசும் மாநில அரசும் வேறு வேறானவை என்பதால் பலர் எதிர்பார்த்தது நிகழவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் அதிரடியே இதுநாள் வரை மத்திய அரசு என்று கூறிக்கொண்டிருந்தவர்களை ஒன்றிய அரசு என்று சொல்ல வைத்தது தான். மத்திய அரசு என்ற பதத்தை ஒன்றிய அரசு என்று கூறத்தொடங்க பா.ஜ.க.வினர் மட்டுமல்லாது அ.தி.மு.க.வினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.


ஆனால், இந்திய அரசியலமைப்பின் படி மத்திய அரசு கிடையாது அது மாநிலங்களில் ஒருங்கிணைந்த அமைப்புதான் இந்தியா என்பதால் அது ஒன்றிய அரசு தான் என்று விளக்கமளித்தனர். மத்திய அரசுக்கு பதில் இனி ஒன்றிய அரசு என்று பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களில் மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.


நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெற்றுத்தரப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாகவே கூறியிருந்தது திமுக. அதை பெற்றுத் தரமுடியும் என்று நம்பியது. தேர்தலில் வென்று சட்டப்பேரவை கூடியதும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பியது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதன் பிறகு மீண்டும் தீர்மானம் இயற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது அரசு.




அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி முதலமைச்சர் ஆளுநரை நேரடியாகவேச் சென்று சந்தித்திருக்கிறார். தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அதை தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஆளுநர். அதுமட்டுமல்லாமல், நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த ஆட்சியைப் போல நீட் தேர்வு தீர்மானம் திருப்பி அனுப்பப் பட்டதைக் கூட ஓராண்டுக்கும் மேலாக சொல்லாமல் மறைக்காமல் தொடர்ந்து அதன் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.


ஆளுநர் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணைப்புப் பாலமாக விளங்கவேண்டியவர் என்பதை மறந்து, மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்று விமர்சித்த திமுக, அவருக்கு எதிராக தொடர்ந்து சாட்டையை சுழற்றிக்கொண்டிருக்கிறது. திமுக பதவியேற்றபோது இருந்த பன்வாரிலால் புரோகித் அரசுடன் இணக்கமாகப் போக, அதன்பிறகு வந்த ஆர்.என்.ரவி தனது அதிகார எல்லையை தாண்டி செயல்பட கொதித்தெழுந்த திமுக அவருக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று எழுதியது முதல், பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா ஓட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் ரவி முடிவெடுத்துவிட்டதாகவேத் தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் அப்படி தான் இருக்கிறது. அய்யா! தாங்கள் ஜனாதிபதி அல்ல என்று அவரை கடுமையாக விமர்சித்து முரசொலியில் எழுதியிருக்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் உள்பட யாரையும் அழைக்காமல் தன்னிச்சையாக துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்த, துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு. முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு சித்தா மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கபப்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.




ஹிந்தி திணிக்கப்படும்போதெல்லாம் எதிர்ப்பது என்பது திமுகவின் ஐந்து கொள்கைகளில் ஒன்று. அதில் இன்றும் உறுதியாக இருக்கிறது திமுக. சமீபத்தைய உதாரணம் அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினை. 'நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை தேச ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என்று அமித்ஷா பேச 


'ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!... இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெறமாட்டீர்கள்!' என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.


மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; தமிழைப் புறக்கணித்து சம்ஸ்கிருதத்தை திணிக்கிறது; குலக்கல்வியை ஊக்கப்படுத்துகிறது; இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் பன்முகத்தன்மைக்கு எதிராகவும் உள்ள புதிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, அக்கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும் பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆரம்பம் முதலே இதை எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறியது மட்டுமல்லாமல்,  மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை  அறிவித்திருக்கிறார்.




கடந்த அதிமுக ஆட்சியில் வரவேற்கப்பட்ட சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு வைப்பதை எதிர்த்து தீர்மானம், துணைவேந்தரை முதலமைச்சரே நியமிக்கலாம் என்று தீர்மானம், ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும் நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தது என்று தொடர்ந்து மத்திய அரசுடன் மாநில உரிமைக்காக சண்டை செய்கிறது திமுக அரசு.


திமுகவின் அடிப்படையே சமூக நீதிதான். அதற்கு பங்கம் வரும்போதெல்லாம் திமுக துணிந்து நிற்கத் தயங்கியதில்லை. நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும் என்று கூறிய ஸ்டாலின், இக்கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் அல்லாத 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஸ்டாலின். 




தனக்கு அவமானம் ஏற்பட்டாலும், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமாயின்  அதனை ஏற்க தயாராக உள்ளேன் என்று சட்டப்பேரவையில் பேசிய அதே ஸ்டாலின் தான், மாநில உரிமைக்கு பிரச்சனை என்று வந்தபோது அதை துணிந்து எதிர்க்கவும் செய்திருக்கிறார். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் ஆளாக வருபவர் ஸ்டாலின் என்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாராட்டுப் பத்திரமே இந்த அரசுக்கான பொருத்தமான பாராட்டாக இருக்கும்.