மதுரை பாண்டிக் கோயில் அருகே உள்ள கலைஞர் திடலில் பேராசிரியர்  க. அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க., இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற 1000க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறன் மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி, மூத்த திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட தி.மு.க., தொண்டர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.



 

உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக மாவட்ட தி.மு.க சார்பில் மேளதாளங்கள், பறை இசை, நாதஸ்வர கச்சேரி,  பொய்க்கால் குதிரையாட்டம்,  உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் ஆயிரக்கணக்கான கரும்புகள், வாழை மரம் கொண்டு இரு புறங்களிலும் பிரம்மாண்டமான தோரணங்களாக கட்டப்பட்டு இருந்தன. நலத்திட்ட விழா ஆரம்பித்து சிறிது நேரத்தில் மழை பெய்ய துவங்கியதால் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் தங்களுடைய கைகளில் நாற்காலியை தூக்கி தலையில் வைத்தபடி நின்று கூட்டத்தை கவனித்தனர்.



 

விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி,"மதுரையில் நடைபெற்ற  பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியின் வழியாகத்தான் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தார். வருங்காலத்தை வழிநடத்த உள்ளார். தமிழக முதல்வருக்கு உற்றத்துணையாக செயல்பட்டு வருகிறார். அனைத்து விதமான விழாக்களையும் நடத்த நீங்கள் வாய்ப்பு தந்தீர்கள், அதேபோல மதுரை மாவட்டத்தில் இளைஞர் அணி கூட்டத்தை நடத்த வாய்ப்பு தாருங்கள்" என்று உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.

 

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "4 நாட்கள் முன்பாக தான் அமைச்சர் மூர்த்தியிடம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தேன். மிகப்பெரிய அளவில் ஒரு மாநாட்டை போல ஏற்பாடு செய்திருக்கிறார்” என பேசினார்.  உதயநிதி ஸ்டாலின்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மதுரை மாவட்ட ஒருங்கிணை திமுக சார்பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டு கூட்டம் வேகமாக நிறைவடைந்ததால் மாவட்ட திமுகவினர் வருத்தம் அடைந்து உள்ளனர்.



 

கூட்டம் துவங்குவதற்கு முன்பாக கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்த பாடல்கள் இசைக்கப்பட்டன. அதற்கு திமுகவினர் நடனமாடி தங்களுடைய மகிழ்ச்சியும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்தினர்.

 




 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர