மதுரை மேலூரில் 2011 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் பொழுது தாசில்தார் காளிமுத்துவை தாக்கியது தொடர்பான வழக்கு நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் மூத்த மகனும் ஆகிய மு.க.அழகிரி மற்றும் தி.மு.க., முன்னாள் துணை மேயர் பி.எம் மன்னன் உள்ளிட்ட 20 பேர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து இந்த வழக்கு ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 





இந்த வழக்கில் ஏற்கனவே பலமுறை மு.க.அழகிரி ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனிடையே திமுகவில் இருந்து மு.க.அழகிரி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தி.மு.க., உறுப்பினர்கள் யாரும் தொடர்புவைக்க கூடாது என அறிவிக்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டிவந்தார். மேலும் தனது ஆதரவாளர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் முதல்வராக வரமாட்டார் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார்.



 

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதற்கு முன்பாக முதல்முறையாக நேற்று தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக மு.க அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தபோது திமுகவினர், மு.க அழகிரி சந்திப்பதற்காக வருகை தந்திருந்தனர். தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகியான முன்னாள் துணைமேயரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான மிசா பாண்டியன் மு.க.அழகிரிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் நீண்டநேரமாக மு.க.அழகிரியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் மு.க.அழகிரியை சந்தித்துள்ளது மீண்டும் மு.க.அழகிரியின் கை தி.மு.கவில் ஓங்கிவருகிறதா ?  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனிடையே மு.க.அழகிரியிடம் தி.மு.கவின் ஆட்சி குறித்தும், உதயநிதி் அமைச்சர் ஆனது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமலயே சென்றார். நீதிமன்றத்தின் செயல் நன்றாக இருப்பதாக தெரிவித்து சென்றார்.