உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு என கூறி பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தி.மு.க., நிர்வாகிகள் அவர்களது மனைவி, தாயார் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு வாய்ப்புகளை பெற்று வெற்றிபெற வைத்தனர். பின்னர் தலைவர்களாக பல்வேறு பதவிகளில் பெண் உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் தொடர்ச்சியாக பெண் மேயர்கள், நகராட்சி, ஊராட்சி , மண்டக்குழு தலைவர்கள் போன்ற பதவிகளில் உள்ள பெண் தலைவர்களை செயல்படவிடாமல் அவர்களது கணவன்மார்களும், குடும்பத்தினரும் அரசு பணிகளில் தலையிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணியின் கணவர் நிர்வாக பணிகளில் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டு கடுமையாக எழுந்தது. இப்படி தொடர்ந்து மேயரை சுற்றி சர்ச்சைகள் எழுந்துவரும் சூழலில் தி.மு.க., மண்டலத்தலைவர் நேருக்கு நேராக தி.மு.க., மேயரை குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் போது வார்டுகளுக்கான பிரச்னை தொடர்பாக மண்டலத் தலைவர் சுவிதா பேசியபோது..,’ வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் குறித்து கூறினாலும் அதிகாரிகளும் மேயரும் கண்டிகொள்வதே இல்லை, மண்டலத்தலைவர்களுக்கான உரிமை முழுமையாக மறுக்கப்படுகிறது என தனது மன வேதனையை வெளிப்படுத்தினார். மேயர் தலைமையில் 5-வது மண்டலத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் அளித்த எந்தவித மனுக்களுக்கும் மாநகராட்சி பதிலும் அளிப்பதில்லை, மேயரும் கண்டுகொள்வதில்லை” என வாக்குவாதம் ஏற்பட்டது.
மண்டல அலுவலகத்தில் கருவூலம் கூட இல்லாத நிலையில் வேறு மண்டலங்களுக்கு சென்று பணம் செலுத்தும் நிலை உள்ளது. கவுன்சிலர்கள், மண்டலத்தலைவர் வார்டு பகுதிக்கு எதை கேட்டாலும் மாநகர பொறியாளரை பாருங்கள் என மேயரே கூறுவதாக மண்டலத்தலைவர் மேயரிடம் நேருக்கு நேராக புகார் கூறியபோது மேயர் நான் நகரபொறியாளரை பார்க்க சொன்னேனா ? சொன்னேனா ? சொன்னேனா ? என மேயர் கேட்க ஆமாம், ஆமாம் , ஆமாம் என மண்டலத்தலைவர் நேருக்கு நேராக கூறியதால் மேயர் கோபமடைந்து நான் அப்படி கூறவில்லை என பதிலளித்தார். திமுக மேயர், திமுக மண்டலத்தலைவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அனைத்து உறுப்பினர்களும் திமுக மண்டலத்தலைவருக்கு ஆதரவாகவும், மேயருக்கு எதிராகவும் மேசையை தட்டி வரவேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்