மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே, கடந்த மாதம் பெய்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், மணல் குவாரிகளில் அனுமதி சீட்டு இன்றி மணல் எடுக்கப்படுவதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி, குறைகளை கேட்டு வந்த கட்சி அல்ல, தீர்க்க வந்த கட்சி, தமிழகத்தில் தற்போது ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் வீதிக்கு வந்து போராடி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள் சிறந்த ஆட்சி என்று. இவர்கள் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
திமுக அரசு மத்திய அரசின் கொத்தடிமை, மோடிக்கு எதிராக கருப்பு குடையை கூட விரிக்க தயங்குபவர்கள், வெளியில்தான் வீரமாக பேசுவார்கள். தமிழகத்தில் அனைத்துமே பிரச்சினைகளாக உள்ளது. என்றும் பிரச்சனையிலேயே பிறந்து வளர்ந்து இறப்பது விவசாயிகள் கூட்டம். அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து உலகிற்கும் கற்றுக் கொடுத்தது நம் தமிழர்கள், நாம் தமிழர் கட்சியின், தேர்தல் சின்னத்திற்கு புலி, மயில் காளை, சின்னங்களைக் கேட்டோம், உயிருள்ள எதையும் தர மாட்டோம் என சொன்ன தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்து சின்னம் விவசாயி ஏனென்றால் விவசாயிகளில் யாரும் உயிரோடு இல்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்து விட்டது" என்றார்.
தொடர்ந்து பேசியவர், “ஒரு மீனவர் மகன், கொத்தனார் மகன், சலவைத் தொழில் செய்யும் வண்ணான் மகன், முடி திருத்தம் செய்யும் மருத்துவ குள மகன், வேளாண் தொழில் மகன் நாட்டை ஆண்டால் ஏழை மக்களின் நிலை என்ன என்று தெரிந்து செயல்படுவார்கள். ஆனால், ஆண்டவர்கள், ஆள்கிறவர்கள் எல்லாம் யார் என கேள்வி எழுப்பினார். அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை பொதுமக்கள் வீதியில் நின்று போராடி கேட்டது உண்டா? டிவி, மிக்சி, கிரைண்டர், ஃபேன் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் ஒரு கிலோ அரிசி என திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்றனர். விளம்பரங்களில் நடிப்பது போன்று தற்போது மாடல் என்ற மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், திமுக ஆட்சியை திமுக மாடல் ஆட்சி என சொல்லி வருகின்றனர். விளம்பரங்களில் நடிக்கும் சினிமா நடிகர்களை போலவும், சல்மான் கான், ஷாருக்கான் விளம்பர நடிப்பது போன்று திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரு மாடல்” என விமர்சித்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் போதுமான வசதிகளுடன் விமான நிலையம் இருக்கும் போது மீண்டும் புதிதாக விமான நிலையம் அமைப்பது தேவையற்றது. தற்போது திமுக அமைச்சர்கள் இன்பநிதியே முதலமைச்சராக பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக கிண்டல் அடித்தார். நாம் தமிழர் கட்சி நடத்திய இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.