எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள் தான். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட என்னை சந்திக்க வந்துள்ளார்" - என பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.
தேமுதிக பொதுச் செயலாளரை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு
தேமுதிக சார்பில் "உள்ளம் தேடி இல்லம் நாடி" பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.
ஒரு மணி நேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்
கிட்டதட்ட ஒரு மணி நேரம் தனியறையில் காத்திருந்த ஆர்.பி.உதயகுமார், பின் மேடையில் சில விசயங்களை பிரேமலதாவிடம் பேசியுள்ளனர். இது கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற. தமிழக வெற்றிக் கழகம் தங்களது கூட்டணி வரவேண்டும் என ஆர்.பி.உதயகுமார் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தவெக தெரிவித்துவிட்டது. இதனால் பா.ஜ.க., மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தான் ஆர்.பி.உதயகுமார் தே.மு.தி.க.,வின் கூட்டணியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் காரணம் இதில் இல்லை ஆர்.பி.உதயகுமார் பேட்டி
இருந்த போதிலும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்...”எனது தாயார் அண்மையில் உயிரிழந்துவிட்டார். அதேபோல் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயாரும், அண்ணியாரும் அண்மையில் உயிரிழந்துவிட்டனர். இந்த துக்க நிகழ்வை பகிர்ந்து கொள்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். மற்றபடி வேறு எந்த அரசியல் காரணமும் இதில் இல்லை. ஆறுதல் கூறுவதற்கான சந்திப்பு மட்டும் தான். மனிதாபிமான அடிப்படையில் துக்கம் விசாரிப்பதற்காக நேரில் வருகை தந்தேன். கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தெரிவிப்பார். இதில் கூட்டணி குறித்து பேசவில்லை” என்று தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி அமையும் - பிரேமலதா விஜயகாந்த்
அப்போது பிரேமலதா அளித்த பேட்டியில்...,” யாருடைய கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
கூட்டணிகள் மாறலாம், தேர்தல் நேரத்தில் முடிவு தெரியவரும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு சூழல் வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் உடன்படுவார்கள். ஏற்கனவே திமுக, அதிமுக இரு கட்சிகளும் தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலிலும் அப்படியொரு சூழல் வரலாம். அப்போது கூட்டணி ஆட்சி அமையும்" எனக்கூறினார்.
இந்த முறை தெளிவாக முடிவெடுப்போம் என நீங்கள் பேசியதற்கு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அர்த்தமாகுமா?" என்ற கேள்விக்கு.
”எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள் தான். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட என்னை சந்திக்க வந்துள்ளார்" - என பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 2026 சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதே, அரசியலுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. தவெக தனி கூட்டணி அமைக்குமா? இல்லை - கரூர் சம்பவத்தின் காரணமாக தவெக - அதிமுக, பி.ஜே.பி., கூட்டணியில் இணையுமா என்பது தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் உறுதியாக தெரியும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.