இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தியா முழுவதையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உருவெடுத்து வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்தியா காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தது.
அசுர வளர்ச்சியில் பாஜக:
நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என நேருவின் பரம்பரையும், அவர்களது ஆதரவுடன் பிரதமர் இருக்கையில் அமர்ந்தவர்களுமே அதிகம். ஆனால், 1980ல் பாஜக உருவான பிறகு கட்சி தொடங்கிய சில வருடங்கள் அதன் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆனால், இன்று வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ளது.
15 மாநிலங்களில் நேரடி ஆட்சி:
அதாவது, தற்போதைய நிலவரப்படி நாட்டில் 15 மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சி செய்து வருகிறது. 6 மாநிலங்களில் ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது. இது நாடு முழுவதும் பாஜக-வின் ஆதிக்கம் எந்தளவு இருக்கிறது என்பதை காட்டுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தல் பாஜக-வின் ஆதிக்கத்தை காட்டியுள்ளது.
அதாவது, அந்த மாநிலத்தில் ஜனதா தளம் கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக அவர்களுக்கு நிகராக 101 தொகுதிகளில் போட்டியிட்டு ஜனதா தளத்தை காட்டிலும் அதிக தொகுதிகள் வெற்றி பெற்று பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1654 எம்.எல்.ஏ.க்கள்:
பீகார் மாநில வெற்றிக்கு பிறகு நாட்டில் பாஜக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை மட்டுமே 1654-ஆக அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 258 எம்.எல்.ஏ.க்களை தன்வசம் வைத்துள்ளனர்.
உத்தரபிரதேசம் - 258
மத்திய பிரதேசம் - 165
குஜராத் - 162
மகாராஷ்ட்ரா - 131
ராஜஸ்தான் - 118
ஒடிசா - 79
மேற்கு வங்கம் - 65
கர்நாடகா - 63
ஆகிய மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதிக எம்எல்ஏக்கள் கொண்ட கட்சி:
தென்னிந்தியா மட்டுமே தற்போது பாஜக-விற்கு சவாலாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே இங்கு ஆட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்க காய்கள் நகர்த்தி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி நாட்டிலே அதிக எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள கட்சியாக பாஜக உள்ளது.
பாஜக-விற்கு நேரடி போட்டியாக கருதப்படும் காங்கிரஸ் கட்சி பலவீனமாகவே ஒவ்வொரு தேர்தலிலும் மாறி வருகிறது. பணமதிப்பிழப்பு காரணமாக மோடி மீதும் பாஜக ஆட்சி மீதும் அதிருப்தி ஏற்பட்ட பிறகும் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை கடந்த முறைக்கு முந்தைய லோக்சபா தேர்தலில் இழந்தது. அடுத்தடுத்து 3 தேர்தலில் பாஜக-விடம் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. அதற்கு காரணம் கூட்டணி ஒற்றுமையின்மை, பிரதமர் வேட்பாளர் யார்? என்ற போட்டி உள்ளிட்ட பல காரணங்களே ஆகும்.
அடுத்தடுத்து இலக்கு:
வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக-வின் அடுத்த இலக்காக மேற்கு வங்கம் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அங்கு ஆட்சியில் அமர பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல, பாஜக-விற்கு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக திகழும் தமிழ்நாட்டிலும் தங்களது கால்தடத்தை பதிக்க பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கான பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.