பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை முன்னிட்டு ஆண்டு தோறும் மதுரையில் உள்ள வங்கியில் தங்க கவசம் எடுக்கப்பட்டு குருபூஜை முடிந்த பின் மீண்டும் பத்திரமாக வைக்கப்படும். இந்நிலையில் இந்தாண்டும் பசும்பொன்னுக்கு தங்க கவசம் கொண்டு செல்லப்பட்டு இன்று மதுரையில் வைக்கப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பாஸ்கரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதன்மை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 1 மணி நேரம் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்னர் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க விரைவில் போராட்டம் நடத்தும். போராட்டம் நடைபெறும் இடம், நாள் குறித்து நானும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் நானும் இணைந்து அறிவிப்போம். ஜெயலலிதா முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க ஜீவாதார உரிமையை பெற்று தந்துள்ளார்.
ஜெயலலிதா 142 அடி நீரை தேக்க அரசாணை வெளியிட்டார். முல்லை பெரியாறு அணையில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொடர்ந்து 3 முறை 142 அடி நீர் தேக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையால் 5 மாவட்டங்கள் பயன் பெற்றுள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க கேரள அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறது. கேரள அரசின் இடையூறுகளை தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு கண்டும், காணாமலும் இருக்கிறது. கேரளா மற்றும் தி.மு.க அரசுக்கு எதிராக 5 மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். முல்லை பெரியாறு அணையின் ஜீவாதர உரிமையை நிலை நாட்ட மக்கள் எழுச்சியுடன் அ.தி.மு.க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது" என கூறினார்.
இது குறித்து அ.தி.மு.க தொண்டர்கள் சிலர் நம்மிடம்...,” முல்லை பெரியாறு சம்மந்தமாக தான் பேசினோம். சசிகலா குறித்தெல்லாம் நாங்க பேசவில்லை. அ.தி.மு.க விரைவில் மிகப்பெரும் போராட்ட சக்தியாக மாறும் என தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...! - மதுரை மாவட்ட மக்களுக்கு நடிகை சினேகா வேண்டுகோள்...!