திரைப்படங்களை திரையரங்குகளில் தான் முதலில் வெளியிட வேண்டும் என்றும், திரையரங்குகளை புறக்கணித்துவிட்டு ஓடிடி தளங்களுக்கு செல்லக் கூடாது எனவும் கேரள மாநில சினிமா துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ”பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை யார் நடித்த படமாக இருந்தாலும் அதை முதலில் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும். ஓடிடி தளங்கள் மூலமாக முதலில் திரைப்படங்களை வெளியிடும் கலாச்சாரத்தை கேரள அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை.”எனக் கூறினார். ஓடிடி என்பது கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இடைக்கால தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒன்று என தெரிவித்த அமைச்சர் ஷாஜி செரியன், ”இக்கட்டான காலக்கட்டங்களிலும், திரையரங்குகளில் திரையிட வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை மட்டுமே ஓடிடியில் இனி வெளியிட வேண்டும். திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது நின்றுவிட்டால் சினிமாத் துறை அழிவை நோக்கி செல்லும்.” என்றார். ஆனால், திரையரங்கத்தில் பெரிய திரையில் வெளியாக வேண்டிய பெரிய திரைப்படங்களை கூட திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகும் ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த மரைக்காயர் திரையப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் சில ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன.
இது குறித்து அமைச்சர் சாஜி செரியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆண்டனி தனது படத்தை திரையரங்குகளில் வெளியிடுவார் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கேரளாவில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாஜி செரியன், “திரையரங்கம் என்பது சாதாரண பேருந்து போன்றது அல்ல. அதில் குளிர்சாதன வசதி இருக்கும். திரையரங்கங்களில் வைரஸ் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. அதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.” என்றார்.
”நிலையான மின்கட்டணம் மற்றும் கேளிக்கை வரியை நிர்ணயிக்க வேண்டும், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்ட திரைப்பட வெளியீட்டாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்” எனவும் அவர் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய சாஜி செரியன்,”திரையரங்க உரிமையாளர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள். அந்த கோரிக்கைகள் சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, நிதித்துறை தொடர்பானவை. இது தொடர்பாக அமைச்சர்களை அழைத்து நவம்பர் 2 ஆம் தேதி முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்த உள்ளார்” என்றார்.