கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் எதுவும் தனித்தனியாக நடத்தப்படக்கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவை கூட்ட ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாதது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் தானாகவே ரத்தாகிவிட்டது.
இதனால், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள் தானாகவே ரத்தாகிவிட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது அனைத்தும் தானாகவே செல்லாத நிலைக்கு வந்துவிட்டது.
தீர்ப்பின் முழு விவரம் இன்னும் வெளியாகாததால் பொதுக்குழுவை கூட்டுவது குறித்த முடிவு செய்வதற்கான சட்ட ஆணையரை யார் நியமிப்பது என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். மேலும், தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதனால், அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள சூழலில், நீதிமன்ற தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வந்துள்ளதால் அ.தி.மு.க.வில் அடுத்த பொதுக்குழு கூட்டம் எப்போது நடக்கும்? என்ன நகர்வுகள்? அடுத்தடுத்து இருக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : AIADMK: அதிமுகவில் 4 குழு.. சட்டப்பேரவையில் அடுத்து என்ன நடக்கும்? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!
மேலும் படிக்க : OPS Case Judgement : அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது..! நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..! இபிஎஸ்க்கு பின்னடைவு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்