ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், புதுச்சேரியில் கடந்த 13 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண நிறைவு விழாபொது கூட்டம் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை , இலக்கிய மாநில தலைவரான சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.



அப்போது, "ஸ்ரீரங்கம் கோயில் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கனல் கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கனல் கண்ணன் மீது கலவரத்தை தூண்டுதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது தெரிந்து கனல் கண்ணன் தலைமறைவானார். எனினும், கனல் கண்ணன் செல்போன் எண்களை வைத்து அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரகசிய தகவல்களின் அடிப்படையில், கடந்த 13 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு தனிப்படை கனல் கண்ணனை நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்தனர். பிறகு கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்ற உத்தரவுபடி 15 நாள் நீதி மன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.



இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கனல் கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோசங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழக அரசு தொடர்ந்து பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளில் உள்ளவர்களை குறிவைத்து கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினர். அனுமதியின்றி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அதே இடத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி கொடுத்துவிட்டு இந்து முன்னணிக்கு அனுமதி வழங்காமல் காவல்துறையினர் ஒரு தலைப் பட்சமாக செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டினர். 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண