தேர்தலுக்கு தயாராகும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை 2 நாட்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமியோடு கடும் வாக்குவாதம் செய்ததாகவும் கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை சமரசம் செய்து வெளியே அழைத்து வந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

காரசாரமான் விவாதம்

ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நிர்வாகிகள் கூட்டங்களில் அதிமுகவினர் அனைவரும் மூச்சு கூட சத்தமாக விட தயங்குவர். அவர் நடத்தும் கூட்டங்களில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் வரும் அளவுக்கு அமைதி நிலவும். ஜெயலலிதா சொல்வதை கேட்டு, அனைவரும் நடந்துக்கொள்வதற்காக மட்டுமே கடந்த கால கூட்டங்கள் நடத்தப்பட்டது.  ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையேற்ற பிறகு தொடக்கம் முதலே ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தங்களது கருத்துகளை எடுத்து வைக்கவும், குறைகளை கூறவும், கோபத்தை வெளிப்படுத்தவும் முடிந்தது.  அதனால், எடப்பாடி பழனிசாமி நடத்திய பல்வேறு கூட்டங்களில் கூட்டணி முடிவு உள்பட பல்வேறு முடிவுகள் பற்றி நிர்வாகிகளுடன் காரசார விவாதத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியிருக்கிறார். ஆனால், அவை அனைத்தும் மூடிய அறைகளுக்குள் மட்டுமே நடந்ததே தவிர, அதனை யாரும் வெளியில் காட்டிக்கொண்டது கிடையாது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதிர்த்து பேசினாரா ?

கரூரில் திமுகவின் வலிமை மிக்க தளகர்த்தர்களில் ஒருவராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருக்கும் செந்தில்பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பேசியதாகவும், அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும் வெளியான தகவல் காட்டுத் தீ போல பரவியது. இதனால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களுமே அதிர்ச்சியாகினர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரே கொடுத்த விளக்கம்

இந்நிலையில், இந்த தகவலுக்கு அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் மீண்டும் அமையும் சூழல் நிலவி வருவதால், அதனை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர் இதுபோன்ற அவதூறு, பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மாவட்டமான கரூரின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் வலுவோடு இருப்பதாகவும் அதிமுக ஐ.டி விங் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதோடு, செந்தில்பாலாஜி குறிப்பிடாமல், ‘தியாகி’ என மறைமுகமாக அவரை குறிப்பிட்டு, அவரின் தோல்வியே இந்த பதிலை சொல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.