12 தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என துரை வைகோ சொன்ன அடுத்த சில நாட்களிலேயே மதிமுகவை சேர்ந்த முத்துரத்தினம் திமுகவில் இணைந்துள்ளார். இத்தனை நாட்களாக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்க தயக்கம் காட்டி வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதிரடி MOVE ஒன்றில் இறங்கியுள்ளதாகவும், செந்தில் பாலாஜி உடனே அதனை முடித்துக் காட்டியதாகவும் பேச்சு அடிபடுகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவை தாண்டி விஜய்யை வைத்து 3வது அணி அமைவதற்கான வேலைகள் நடந்து வருவதால் அரசியல் களம் சூடாகியுள்ளது. இந்த 3வது அணி ஆப்ஷனை வைத்து திமுக, அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்டு கூட்டணிக் கட்சிகள் நெருக்க ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் மதிமுகவுக்கு 12 தொகுதிகள் வேண்டும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளார் துரை வைகோ. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ’’மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 12 தொகுதிகளில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கின்றனர். இது குறித்து இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க தீர்மானம்
அதன்பிறகு நடந்த மதிமுக பொதுக்குழுவில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது திமுகவினருக்கு ஷாக்கை கொடுத்தது. இந்தநிலையில் 2021 தேர்தலில் பல்லடத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துரத்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை திமுகவில் இணைந்துள்ளார்.
துரை வைகோ- சீனியர்கள் யுத்தம்
மதிமுகவில் துரை வைகோ கைகளுக்கு அதிகாரம் வந்ததில் இருந்து கட்சியின் சீனியர்களை ஓரங்கட்டுவதாக பேச்சு இருக்கிறது. துரை வைகோவுக்கு மல்லை சத்யாவுக்கும் இடையிலான பிரச்னை வெளிப்படையாகவே வெடித்தது. மல்லை சத்யா தரப்பில் இருக்கும் முத்து ரத்தினத்தையும் துரை வைகோ கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டி வருவதாக சொல்கின்றனர்.
அதனால் அதிருப்தியில் இருந்த முத்துரத்தினம் திமுகவில் இணைவதற்காக கோவை மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். ஆனால் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் திமுகவுக்கு வந்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
அதிருப்தியில் இருப்பவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்
இந்த நிலையில் அதிக சீட் கேட்டு மதிமுக நெருக்க ஆரம்பித்துள்ளதால், அதிருப்தியில் இருப்பவர்கள் திமுக பக்கம் சாய்ந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என அதிரடி மூவ் ஒன்றில் ஸ்டாலின் இறங்கியுள்ளதாக தெரிகிறது. உடனடியாக செந்தில் பாலாஜியும் அந்த அசைன்மெண்டை முடித்து முத்து ரத்தினத்தை திமுகவில் இணைத்துள்ளார்.
கூட்டணியின் நலனுக்காக இத்தனை நாட்களாக கட்சி தாவுவதற்கு தடையாக இருந்து வந்த ஸ்டாலின், தொகுதி பங்கீடு விவகாரத்தில் துரை வைகோவுக்கு வார்னிங் கொடுக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. இதனால் திமுகவுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.