அதிமுகவின் முக்கிய முகமாக இருக்கக் கூடிய ஜெயக்குமார், கடந்த சில வாரங்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வருவது ஏன்..அவருக்கும் ஈபிஎஸ் க்கும் நடுவே என்ன பிரச்சனை? என்பன குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதிமுக மூத்த நிர்வாகி, முன்னாள் அமைச்சர், ஈபிஎஸ்ஸின் ரைட் ஹேண்ட் என கட்சியில் பவர்புல்லாக இருப்பவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஜெயக்குமார்தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க் கட்சிகளை துவம்சம் செய்து கொண்டிருப்பார்.
பாஜக கூட்டணிதான் தோல்விக்குக் காரணம்
கடந்த 2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தது. அதிமுகவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமே பாஜக கூட்டணிதான் என விமர்சனங்கள் சூழ்ந்தது. பின்னர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.
அப்போது ’’25 வருசம் ராயபுரத்துல முடிசூடா மன்னனா இருந்தேன், யாரால தோத்தேன், பிஜேபியாலதான் தோத்தேன்’’ என வெளிப்படையாக சொல்லியவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதையே ஜெயக்குமாரை வைத்துதான் அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
மீண்டும் கூட்டணி; அப்செட்டில் ஜெயக்குமார்
அதன்பிறகும் கட்சி சம்பந்தமான முக்கியமான விஷயங்களில் ஜெயக்குமார் மூலமாகவே தனது கருத்துகளை இபிஎஸ் சொல்லி வந்தார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என விடாப்பிடியாக இருந்த ஜெயக்குமார் தற்போது மீண்டும் கூட்டணி அமைந்துள்ளதால் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர்.
அதுவும் இபிஎஸ் டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பது தொடர்பாக தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லையே என்ற கவலையும் ஜெயக்குமாருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து திரும்பிய பிறகும் இபிஎஸ் தன்னை அழைத்து பேசுவார் என எதிர்பார்த்த ஜெயக்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் இபிஎஸ் பக்கம் நின்றும், கட்சியில் தற்போது எனக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என ஜெயக்குமார் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருவதாக சொல்கின்றனர்.
தவிர்த்த ஜெயக்குமார்
சென்னையின் முகமாக இருக்கக் கூடிய ஜெயக்குமார் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து நிற்பார். ஆனால் அதிமுக பாஜக கூட்டணி பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும்போது அந்த பக்கமே வராமல் தவிர்த்தார். மேடையிலும், இபிஎஸ் வீட்டில் நடந்த விருந்திலும் கே.பி.முனுசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணியை மட்டுமே பார்க்க முடிந்தது. எஸ்.பி.வேலுமணியை வைத்து இபிஎஸ் ஜெயக்குமாரை அழைத்தும் வேறு ஏதோ காரணங்கள் சொல்லி ஜெயக்குமார் வராமல் தவிர்த்ததாக சொல்கின்றனர்.
நாளுக்கு நான்கு ப்ரஸ்மீட் கொடுத்து ஹெட்லைனில் இடம்பெறும் ஜெயக்குமார் தற்போது வெளியே தலைகாட்டாமல் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார்.
கட்சி நலனுக்கு ஏற்புடையதல்ல
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவால் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது ஜெயக்குமாரும் முரண்டு பிடித்து வருவது கட்சி நலனுக்கு ஏற்புடையதல்ல. எனவே ஜெயக்குமாரை சமாதானப்படுத்தி மீண்டும் பேக் டூ ஃபார்முக்கு எடப்பாடி கொண்டு வர வேண்டும் என்கின்றனர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள்.