மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த எம். முருகானந்தம் தனது பதவியில் இருந்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நடந்து முடிந்த தமிழக தேர்தலில் முருகானந்தம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் திருச்சி திருவெறும்பூரில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கடிதத்தில் 'கட்சியில் தற்போது நிலவக்கூடிய ஜனநாயகமற்ற சூழ்நிலையில் நான் இனியும் கட்சியில் தொடர்ந்து நீடிப்பது சரி இல்லை என முடிவு செய்துள்ளேன். மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்தது முதல் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் நான் திறம்பட செய்தேன், தென் மண்டலம் முழுவதும் குறிப்பாக டெல்டா பகுதிகளிலும் திருச்சி மண்டலத்தில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக தங்களுக்கும் மற்றும் மக்கள் நீதி மய்ய உறவுகளுக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக தேர்தலுக்கு பிறகு நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலர் விலகுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் அக்கட்சியில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் திடீரென விலகினார். அத்துடன், கமல் மற்றும் கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். அவர் விலகிய பிறகு மக்கள் நீதி மய்யதில் இருந்து பலர் விலகி வருகின்றனர்.
மேலும் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முருகானந்தம் எழுதிய கடிதத்தில் 'எல்லாவற்றுக்கும் மேலாக எங்களது கடந்த கால சிறப்பான செயல்பாடுகள் பற்றியும் நினைத்துப் பாராமல் உயர் மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன? இனிவரும் நாட்களில் கட்சியை எப்படி வளர்ப்பது என்பதை ஆராய்ந்து, தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பை கூட நீங்கள் ஏற்காமல் எங்களை பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன அந்த கணமே எனது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாக கருதுகிறேன்'.
அதனால் இனியும் இந்த கட்சியில் தொடர்வதைவிட வெளியேறுவது மேல் எனக் கருதி பொறுப்பில் இருந்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். நீங்கள் எதிர்பார்த்தது போலவே தற்போது கட்சியில் நேர்மையானவர்களும், திறமையானவர்களும் வெளியேறிவிட்டனர். ஏற்கனவே நான் செய்து வந்த மக்கள் சேவையை மக்கள் நீதி மையம் கட்சியின் மூலமாக சிறிது காலம் செய்ய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நேர்மையானவனாகவே எனது சமூகப் பணியை தொடர்வேன், உங்களுக்கும் கட்சிக்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார் முருகானந்தம்.