பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர்


வரும் 26ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மறுநாள் 27ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். பிரதமராக 3வது முறையாக மோடி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது என்பதால் பெரும்பாலும் எல்லா மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.


பிரதமரை தனியாக சந்திக்கிறாரா முதல்வர் ?


இந்நிலையில், நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பிரதமரை சந்திக்க காரணம் என்ன ?


3வது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களையும் பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க முடிவு எடுத்திருக்கிறார். அதோடு, தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தவுள்ளார்.


ஆளுநருக்கு பிறகு பிரதமரை சந்திக்கும் முதல்வர்


சமீபத்தில் ஆளுநர் ரவி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் கள நிலவரம், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்தெல்லாம் அறிக்கை அளித்துவிட்டு வந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்திக்கவுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


”ஆளுநரை மாற்ற வேண்டும்” பிரதமரிடம் கேட்கப்போகிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?


கூடுதலாக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் வரும் 31ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில், அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் நீடிக்க கூடாது என்றும் அவருக்கு இங்கேயே பதவி நீட்டிப்பு தரக்கூடாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கச் செல்லும் போது வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.


திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு எந்த வகையான ஒத்துழைப்பையும் தரவில்லை என்றும் அதோடு தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதையும் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


தனி சந்திப்பு நடக்குமா ?


ஆனால், பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதை இன்னும் முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தாத நிலையில், இந்த சந்திப்பு நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி கட்சி முக்கிய தலைவர்கள் யாரும் பிரதமரை தனியாக சந்தித்து பேசாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வரான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமரை சந்தித்து மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்த நிலையில், மாநில வளர்ச்சியை கருத்திக்கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கைகளை பிரதமரை சந்தித்து முன் வைப்பார் என்றும் கூறப்படுகிறது.