தமிழகத்தில் கடந்த 2019 -ல், 27 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் வரும் 2025 ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இவை தவிர 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது. இந்த சூழலில் அதற்கான தேர்தலை இன் நேரம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. ஆளும் தி.மு.க அரசும் அதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டதாக தெரியவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, 'உள்ளாட்சி ஜனநாயகம்', 'உள்ளாட்சி நிதி' என தடால் புடால் அரசியல் செய்த தி.மு.க, ஆளுங்கட்சியான பிறகு, 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அமைதிகாப்பது, பலத்த விமர்சனங்களை எழுப்பி வருகின்றது. 


2 ஆண்டுகளுக்கு முன்பே முடிகிறதா பதவிக்காலம்?


இந்நிலையில் தான் 2021-ல் நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிவுக்கு வரும் என்ற தகவலும் பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 6 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவை தான் கிராமங்கள், டவுன், நகரங்கள் வாரியாக நிர்வாகங்களை மேற்கொண்டு வருகின்றன. இதில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை ஊரக உள்ளாட்சி அமைப்புகள் என அழைக்கப்படுகின்றன. அதேவேளையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவை உள்ளன. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் என கூறப்படுகிறது.




ஊரக உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி, நகர்பற உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி அதில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகளாகும். இதனால் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது 2027 ம் ஆண்டு வரை இருக்கிறது. இதில் யாருக்கும் எந்த குழப்பமும் இல்லை.


பதவிக்காலம் தொடர்பான சந்தேகம் 


மாறாக தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் தொடர்பாக தான் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த முறை தமிகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடத்தியது தான். அதாவது கடந்த 2019-ல் அதிமுக ஆட்சியின்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இந்த தேர்தல் என்பது நடத்தப்படவில்லை.




மாறாக 2019ல் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 21 மாத இடைவெளிக்கு பிறகு 2021ல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் 2019 தேர்தலில் தேர்வானவர்களின் பதவிக்காலம் என்பது வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. மாறாக 5 ஆண்டு பொறுப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் 2021ல் 9 மாவட்டங்களில் தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது 2026 தான் நிறைவு பெறுகிறது.


ஒரே கட்டமாக தேர்தல் 


இதனால் இந்த காலஇடைவெளியை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய சூழலும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஒரு தகவல் பரவ தொடங்கியது. அதாவது 2021-ம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதன்பிறகு மொத்தமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒன்றாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.


கடைசி ஒன்றிய குழு கூட்டம் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைவதால் கடைசி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையாக செயல்பட்டு, மக்களுக்கு தேவைக்கான வளர்ச்சி பணிகளை செய்து தந்த ஒன்றிய பெருந்தலைவருக்கு நன்றியை தெரிவித்தனர்.




கண் கலங்கிய ஒன்றிய சேர்மன்


தொடர்ந்து பேசிய ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் 5 ஆண்டுகள் கடந்ததே தெரியவில்லை, கட்சி பாகுபாடின்றி ஒரே குடும்பம் போல பயணித்தோம் என அழுது கொண்டே பேசினார். இந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் புண் படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என கைக்கூப்பி கண்ணிருடன் கேட்டுக்கொண்டார். இது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த கூட்டத்தில் ஒன்றிய துணை பெருந்தலைவர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.