கடலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில்  முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித கப்பல்கள் என்று முதல்வர் கூறியிருப்பது அவரது அவருக்கு பதவிக்கு அழகல்ல. தற்போது துபாய் பயணத்தை முடித்து விட்டு ரூ.6100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும், அதற்கான உள்கட்டமைப்பு வாய்ப்புகள் உள்ளனவா என்பது தான் எங்கள் கேள்வி எழுப்பினார். 

 

2030 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு 1 லட்சம் டிரில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்ததை வரவேற்கிறோம்.  ஆனால், 2001-2017 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.34 ஆயிரம் டிரில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் டிரில்லியன் டாலர் முதலீடு பெற்றாலே பெரிய வெற்றி தான். ஆனால், இதனை நிறைவேற்ற சென்னையில் 10 ஆயிரம் ஏக்கர் நிலமும், மொத்தமாக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை. தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் அதற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும்.

 



அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக மேஜை அமைத்து முதலீட்டாளர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டோம். அதன் மூலமாக வந்த ஒப்பந்தங்களை அடுத்து வந்த அரசு நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமே தவிர குறை கூறிக் கொண்டு இருக்கக் கூடாது.

 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 98 நிறுவனங்களிடம் ரூ.2.45 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 74 நிறுவனங்கள் தொழில் துவங்கி விட்டனர். இதேபோல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3.51 லட்சம் கோடிக்கு 272 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 81 நிறுவனங்கள் தொழில் துவங்கிய நிலையில், 191 நிறுவனங்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதிமுக ஆட்சியில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். அந்த அடித்தளத்தில் தான் தற்போது உலக முதலீட்டை தமிழகம் ஈர்த்து வருகிறது. கடந்த முறை லூலூ நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வந்தார்கள். ஆனால், போதுமான இடம் கிடைக்கவில்லை. இப்போது வந்திருப்பது மகிழ்ச்சி தான். 

 

கரோனா காலத்தில் கூட ரூ.60,614 கோடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது. எனவே, தொழில்துறை முதலீடு என்பது ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.  இதில், ஒருவரையொருவர் குற்றம் சாட்டினால் தொழில்துறையில் வளர்ச்சி காண முடியாது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு தமிழகத்தில் இருந்து தலைவர்கள் சென்றால் உற்சாகமாக வரவேற்பு அளிப்பது வழக்கமானது தான். எனவே, கடந்த ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

 

இறுதியில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட முதலீடுகள் காகித கப்பல் அல்ல ஐஎன்எஸ் விக்ரம் கப்பல் போன்றது  காகித கப்பல் என கூறுவதை முதல்வர் நிறுத்தி கொள்ள வேண்டும் . திமுக அரசு பொறுப்பேற்றதும் 10 மாத கால ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி போல பெருமை கொண்ட துறை வேறு எதுவும் இருக்காது எனவே இதில் குறை கூற வேண்டாம் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும், என கூறினார்.