மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் அதற்கான பணிகளில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பா.ம.க. யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பா.ம.க. யாருடன் கூட்டணி:
இந்த சூழலில், சென்னை எழும்பூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,
“யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். மருத்துவர் ராமதாசுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என்பது எனக்கு பெரிய வருத்தம். கூட்டணி குறித்து முடிவெடுக்க பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு முழு அதிகாரம் உண்டு. எங்கள் கொள்கைகளுக்கு ஒத்து வரும் கட்சியோடு மட்டுமே கூட்டணி அமைப்போம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
பாரத ரத்னா வழங்கவில்லை என வருத்தம்:
முன்னதாக, செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “குடியரசு தினத்தை ஒட்டி மத்திய அரசு விருதுகளை அறிவித்தது. அதில் தகுதியான பலருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அதில் எனக்கு ஒரு வருத்தம். 85 வயதாகும் மருத்துவர் ராமதாஸ்-க்கு பாரத ரத்னா வழங்கவில்லை என வருத்தப்படுகிறேன்.
முதல்வராக இருந்து சாதனை செய்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எந்த பதவியிலும் இல்லாம் மருத்துவர் ராமதாஸ் பல சாதனைகளை செய்துள்ளார். சமூக நீதி என்று சொன்னால் மருத்துவர் ராமதாஸ் மட்டுதான் உள்ளார்.
மக்கள் வளர்ச்சி திட்டம்:
எந்த முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பது, அறிக்கை கொடுப்பது பா.ம.க. தான். மற்றவர்கள், அதன் பின்னர் நம் அறிக்கையை பார்த்து காப்பி அடித்து வெளியிவார்கள். பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சமூகநீதிக்காக குரல் கொடுப்பதே இல்லை. 30 ஆண்டுகளாக பாமக போராடி வந்தது முடியவில்லை பின்னர், ஆட்சி அதிகாரம் கிடைத்தது. பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டத்தை பாமக கொண்டு வந்தது.
பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும், அப்போது தான் நல்ல பல திட்டங்களை கொண்டு வர முடியும். மகளிர் மாதம் ரூபாய் 1000, பொங்கலுக்கு ரூபாய் 1000, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 கொடுத்தோம் என முதல்வர் பேசுகிறார். இதெலாம் மக்கள் வளர்ச்சி திட்டம். இதன் மூலம் மக்கள் முழுமையான வளர்ச்சி பெற்று விடுவார்களா ..?
மக்கள் நல திட்டம் என்றால் பாமக கொண்டு வந்த 108 அவசர ஊர்தி போல இருக்க வேண்டும். தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழை வளர்க்கவில்லை. இனி வரும் காலம் பா.ம.க.வின் காலம். கூட்டணி தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். அவர் யாருடன் கூட்டணி அமைத்தால் நாம் களத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மேலும் படிக்க: அதிமுகவில் ஓ.பி.எஸ்- க்கு எந்த உரிமையும் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு