மறைந்த தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர் - ன் 107 வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி, உறையூர், குறத்தெருவில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் பூபதி ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, பகுதி கழகச் செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, அன்பழகன், முஸ்தபா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.


அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்... 


நிரந்தர பொதுச்செயலாளர் EPS தான் என பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் பொதுக்குழுவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், அவர் எந்த அடிப்படையில் உரிமை மீட்பு போராட்டம் என தனது சகாக்கள் 4 பேருடன் ஊர் ஊராக செல்கிறார். அவருக்கு அதிமுகவில் என்ன உரிமை இருக்கிறது என கேள்வி எழுப்பினார். 




மேலும், நரேந்திர மோடியை  மீண்டும் பிரதமராக்க கூட்டணி சேர்கிறோம் என ஓபிஎஸ் சொல்கிறார். அவரின் கருத்தை டிடிவி தினகரனும், வழிமொழிகிறார். அதிமுகவும் மோடி தான் மீண்டும் பிரதமர் என கூறி வந்தோம். ஆனால் பாஜக தொண்டர்களோ அடுத்த முதல்வர் அண்ணாமலை தான் என முழக்கமிடுகின்றனர். அதிமுக, அதிமுக தொண்டர்கள் என்ன இளிச்சவாயர்களா? மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைக்க அதிமுக  பாடுபடும். ஆனால் தமிழ்நாடு முதல்வர் அண்ணாமலை என நீங்கள் முன்னிறுத்துவதா? என கேள்வி எழுப்பினார். எடப்பாடியார் ஆண்மையோடு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் தமிழ்நாடு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மனதார அதிமுகவை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக மறைந்த முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் மக்களுக்கு என்னெற்ற திட்டங்களை செய்து இருக்கிறார்கள். அவர்களின் வழியில் எடப்பாடி. பழனிச்சாமி அவர்களும் மக்களுக்காக உழைத்தவர். ஆனால் தற்போது உள்ள திமுக அரசு மக்களுக்காக எந்த நல்ல திட்டஙகளையும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். 


தமிழ்நாடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றியை பெறும். அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.