விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில், இன்று காலை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் சுருதன் ஜெய் நாராயணன், சார் ஆட்சியர் தில்யான் ஷி நிகம், திமுக மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ரெட்டி நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அமைச்சர்  செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில்,


விழுப்புரம் மாவட்டத்தில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் திரு.ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டிவனம் வட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிறந்த திரு.ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் சட்டம் பயின்று இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக 1947 முதல் 1949 வரை பதவி வகித்தார்.


விவசாயிகள் மற்றும் ஏழை, எளியோர் முன்னேற்றத்திற்காக சிந்தித்து உழைப்பு, நேர்மை, கண்டிப்பு கட்டுப்பாடு, விவசாயத்தில் ஆர்வம், சிக்கனம், சன்மார்க்கம், நீதி தவறாமை ஆகிய குறிக்கோளுடன் ஆட்சி நடத்தியவர் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என கருதியவர். எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் மிக்கவர், சிறந்த எழுத்தாளர், சமூக சேவகர், நேர்மையும் துணிச்சலும் மிக்க கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர் 1970-ம் ஆண்டில் தனது 75-வது வயதில் காலமானார். தமிழக அரசு இவரது நினைவாக சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது.


தமிழ்நாடு அரசு அன்னாரது நினைவாக தபால் தலையும் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம், ஓமந்தூரில் சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130-வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். தொடந்து பேசிய அவர், "அதிமுக எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு அன்றைக்கு ஆதரவு அளித்தார், தற்போதாவது மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்" என கூறினார்.