நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதற்கான பணிகளில் கடந்த ஓராண்டாகவே அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர்.


மக்களவைத் தேர்தல்:


இந்தியாவில் பாஜகவை எதிர்க்கும் மிகவும் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றும், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியுமான தி.மு.க.வும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் திமுக இடம்பெற்றுள்ளது.


பாஜக தலைமையிலான கூட்டணியினர் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடியை அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி தரப்பில் பிரதமர் வேட்பாளராக யாருமே முன்னிறுத்தப்படவில்லை. தமிழ்நாட்டின் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளாக உள்ளது.


தொடங்கும் கூட்டணி பேச்சுவார்த்தை:


இந்த நிலையில், தி.மு.க. இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, திண்டுக்கல் ஐ பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இடம்பெற்றுள்ளனர்.


தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய கட்சிகளாக இடம்பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற இன்னும் சில கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் மேலே குறிப்பிட்ட கட்சிகளுக்கே தொகுதிப் பங்கீட்டில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிக தொகுதிகளுக்கு ஆர்வம் காட்டும் தி.மு.க?


தற்போது டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீட்டு குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும். கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளிலும், மற்ற 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன. இந்த முறை தி.மு.க. ஆளுங்கட்சி என்பதால் கடந்த முறையை காட்டிலும் கூடுதலாக போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த முறை தி.மு.க. 20 தொகுதியிலும், காங்கிரஸ் 10 தொகுதியிலும், வி.சி.க., மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ம.தி.மு.க.விற்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்கப்பட்டது. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த முறை மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொகுதிப் பங்கீட்டின் எண்ணிக்கை மாறும் என்று கருதப்படுகிறது.


மேலும் படிக்க: DMK Election committee: திமுக அதிரடி - கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு - 3 குழுக்கள் அமைப்பு


மேலும் படிக்க: Thaipusam : 25-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்.. பழனியில் கொடியேற்றத்துடன் தொடக்கம்..