பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


தமிழ் கடவுள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் வணங்கப்படுபவர் முருகன். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி சேர்ந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி வருகிறது. முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான நாட்களில் ஒன்று தைப்பூசம். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். அதேபோல் முருகன் கோயிலுக்கு சென்று அபிஷேகங்கள் கண்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாடினால் சிறப்பு. 


அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும்  பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை‌ 8.30 மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6 ஆம் நாள்  திருவிழாவான ஜனவரி 24-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.


தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டமும், ஜனவரி 25-ஆம்  தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.  அருள்மிகு முருகபெருமான் இன்று முதல் தினமும் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.  கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழு தலைவர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் மாரிமுத்து உதவி ஆணையர் லட்சுமி,உள்ளூர் பிரமுகர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர். வருகிற  28-ஆம் தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.