நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்குமான குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. அதில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு கனிமொழியும், தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமைச்சர் கே.என். நேருவும் தலைமை தாங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் அறிக்கை குழு:


கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவில், டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.






தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு:


மூத்த அமைச்சர் கே. என். நேரு தலைமையிலான தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உடன் அமைச்சர்களான எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.






தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு:


நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழுவிற்கான தலைவராக, திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார். அந்த குழுவில்,  அமைச்சர்களான் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், திமுக துணைப் பொதுச்செயலாளர்களான பொன்முடி மற்றும் ஆ. ராசா ஆகியோருடன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.






தீவிரமடையும் தேர்தல் பணிகள்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவும் தங்களது கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்தபிறகு தொடங்கும் என அறிவித்து இருந்தது. இந்நிலையில் தான் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழு, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக் குழு ஆகிய 3 குழுக்களை அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை, திமுக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.