நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி 16 பேரூராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஆலோசனை கூட்டம் நெல்லை என் ஜி ஓ காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பாரதி ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய பேசிய பாரதி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும் பொழுது, நெல்லை மாநகராட்சி வேட்பாளர்கள், நகராட்சி, மற்றும் பேரூராட்சி வேட்பாளர்கள் மூலம் இதுவரை பாஜக செல்லாத இடங்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியை அழைத்து சென்று கொண்டிருக்கிறீர்கள். பாஜகவிற்கு புதிய எழுச்சி கிடைத்துள்ளது.




8 ஆண்டுகள் பாஜகவின் ஆட்சியால் தேர்தல் களத்தை பாரதிய ஜனதா கட்சி தயாரித்து வைத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் செல்கிறது. தமிழகத்தில் லட்சகணக்கான தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கொரோனா கால சுவநிதி மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு மூலம் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது பைலை பத்தி மட்டுமே கவலைபட்டது, ஆனால் மோடி தலைமையிலான தற்போது இருக்கும் மத்திய அரசு மக்களின் லைபை பற்றிதான் கவலைபட்டு வருகிறது. பாராளுமன்றத்தில் 2 எம்பிகள் மட்டுமே இருந்த பாஜக 20 ஆண்டுகளில் 303 எம்.பிக்களையும் 3300 எம்.எல்.ஏக்களையும் வைத்துள்ளது.


நாட்டிலேயே அதிக எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் கட்சியாக பாஜக இருக்கிறது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருமே வருங்கால தலைவர்களாக உருவெடுக்க உள்ளனர். பாஜகவில் மட்டும் தான் முதுமைக்கும் இளமைக்கும் அனுபவத்திற்கும் மரியாதை அளிக்கப்படும். 12838 வேட்பாளர்கள் பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டு உள்ளனர், இவர்கள் யாரும் அரசுடைய ஒரு பைசாவை கூட எடுத்தவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள ஊழலை பார்க்கமுடியாமல் பாஜகவின் புதுக்கோட்டையை சேர்ந்த வேட்பாளர் 10 நாட்கள் கண்ணை கட்டி பிரச்சரம் செய்து வருகிறார். மக்கள் முகத்தை பார்க்க முடியாமல் களத்திற்கு வராமல் கம்ப்யூட்டரில் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆணவ படுகொலை அதிகரித்துவிட்டது.



நீட் தேர்வை ரத்து செய்ய கம்ப சூத்திரம் இருப்பதாக  சொன்ன உதயநிதி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நிலையில் துபாயில் உள்ளார். திமுக அரசு மக்கள் நலனுக்கான அரசு அல்ல. ஒன்றிய அரசு என சொன்னால் பாரதத்தின் துணை பிரதமராகி விடலாம் என தமிழக முதலமைச்சர் நினைக்கிறார். நீட் தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர்  கடிதம் எழுதிய 12 நபர்களும் அவருக்கு பதிலளிக்கவில்லை.  நீட் மூலமாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் இருளர் சமூதாயத்தை சேர்ந்த மாணவி மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளார்.


2016 வரை ராசிபுரம் பகுதியில் படிக்கும் 25% மருத்துவமாணவர்கள் வந்துள்ளனர். 10 சதவீத மாணவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து மருத்துவத்திற்கு சென்றனர். ரியல் எஸ்டேட் அதிபரெல்லாம் கல்வி தந்தையாக உருவெடுத்தனர். இதுபோன்றவைகளை தடுக்கவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் உள்ள 50% இடங்களுக்கு அரசு கட்டணத்திற்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என பிரதமர் போட்ட உத்தரவிற்கு இன்னும் ஒருவாரத்தில் கூக்குரல் எழும் எனத் தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது 70 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடம் 2,300 ஆனால் 8 ஆண்டுகளில் 2500 இடங்கள் மருத்துவம் பயில மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.





செல்போன் எண் போல் ஒற்றை இலக்கத்தில் தேர்தலில் நிற்கும் கட்சிகள் எல்லாம் பாஜகவை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள். ராகுல் காந்தி மோடியை பற்றி பேசிய போதெல்லாம் அதிகபடியான இடங்களில் பாஜக வெற்றி பெற்றனர். ராகுல் காந்தி தமிழகத்தில் பாஜக வரமுடியாது என சொன்னதில் இருந்து தமிழக பாஜகவிற்கு சுக்கிரதிசை அடித்துள்ளது. பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி பல உள்ளாட்சிகளில் தேர்வாகி உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூவில் உள்ள நோயாளி. திமுக கொடுக்கும் ஆக்சிஜனால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் இயங்குகிறது என தெரிவித்தார்.


பாஜக மட்டுமே அரசியலை தாண்டி மக்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறது. எந்த காலத்திலும் மதத்தை வைத்து அரசியல் செய்யாத கட்சி பாஜக., எதிர்தரப்பினரே எதையாவது செய்துவிட்டு பாஜவை சொல்லுவார்கள். முடிவுகளை பற்றி கவலைபடவேண்டாம். பாஜக தோல்வியை பற்றி கவலைபட்டதில்லை. கடுமையாக போராடி தோல்வி அடைந்தால் அதைவிட பாஜகவிற்கு ஆனந்தமில்லை. போர்களத்தில் தான் வீரன் தோல்வியடைவான். ஒருநாளும் வெற்றி தோல்வியை பற்றி வேட்பாளர்கள் கவலைபடவேண்டாம். பாஜகவின் காலம் தமிழகத்தில் வந்துவிட்டது. தமிழகத்தில் தாமரை பல இடங்களில் மலர்ந்துகொண்டே இருக்கிறது என தெரிவித்தார்.