முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தற்போதைய குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த குமாரி மங்கலத்தைச் சேர்ந்தவர் தான் இந்த குமரி ஆனந்தன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை. குமரி ஆனந்தனின் மனைவி பெயர்  கிருஷ்ண குமாரி, இவரது தந்தை, கலைஞர் கருணாநிதியின் புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டவர். காமராஜர் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் இயங்கி வரும் குமரி ஆனந்தன் எந்த வித கரையும் படியாத சுத்தமான அரசியல்வாதி.


தனது அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு எந்த ஒரு சிறு விமர்சனத்துக்கு கூட இடம் கொடுக்காமல் ஊழலுக்கு இடம் கொடுக்காமல் தனது பெயர் கெட்டுப் போகாமல் இதுவரை பார்த்து வருகிறார் என்பதுதான் இந்த முதுபெரும் அரசியல் வாதியின் சிறப்பு அம்சமாகும். சென்னை லாயிட்ஸ் காலனியில் வெகு நாட்களாகவே புத்தகங்களை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு தனியாக தங்கி இருக்கிறார். கல்லூரி பேராசிரியராக குடும்பம், மற்றும் பிள்ளைகள் என்று வாழ்ந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டராக மட்டுமே இருந்த இவரின் பேச்சை கேட்டு காமராஜரே அரசியலுக்கு இழுத்துக்கொண்டது வரலாறு. 



இவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜகவின் தலைவராக இருந்து பெரும் விமர்சனங்களை எல்லாம் சந்தித்தவர். ஆரம்ப காலத்தில் அவரது தந்தை குமரி அனந்தன் பாதயாத்திரை மேற்கொண்டபோது, ஒரு மருத்துவராக தன் தந்தையை கவனித்து கொண்டார் தமிழிசை. இவரிடம் சமீபத்திய நேர்காணலில் தமிழிசை உடன் ஏன் தங்குவதில்லை என்று கேட்ட கேள்விக்கு, "என்னை அவர் அழைக்கும்போதெல்லாம், வேண்டாம் என்று மறுத்து விடுவேன். அவர் சென்னைக்கு வரும்போது எல்லாம் அவர் சமைக்கும் உணவைதான் சாப்பிடுகிறேன். அவர் சமைத்து வீட்டிற்கு அனுப்புவார். ஆனால் அவர் வீட்டிலேயே நான் சென்று இருந்தால் அவரது அரசியல் வாழ்க்கைக்கு சில பிரச்சனைகள் வரலாம். அவருக்கு உதவியாய் இல்லை என்றாலும் உபத்ரவமாய் இருந்துவிடக்கூடாது. எனக்கு அவர் மீதும் அவருக்கு என் மீதும் அளவுகடந்த பாசம் உண்டு, ஆனால் கொள்கை வேறு, கோட்பாடுகள் வேறு அவ்வளவுதான். என்றார். அடிப்படையில் ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த அவர் பாஜகவில் எதிர்பாராவிதமாக தன்னை இணைத்து கொண்டார். தமிழகத்தில் பிரபலமாகாத பாஜகவை அவர் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பிரபலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். 



ஆளுநர் தமிழிசைக்கு குமரி ஆனந்தன் தரும் அறிவுரை என்ன என்று கேட்டபோது, "செய்யும் வேலையில் நேர்மையுடனும், முழு ஈடுபாடுடனும், ஆளுநராக அந்த மக்களுக்கு நன்மையையும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை கொடுக்கவும் உழைக்க வேண்டும், அவ்வளவுதான்" என்றார். அவரது தந்தையின் தமிழ் ஆளுமை தமிழிசைக்கும் உண்டு. எதுகை, மோனை நடையில் உரையாடுவது, சிறந்த உச்சரிப்பு நடை போன்றவற்றால் அவரது பேச்சு பலரையும் ஈர்த்தது. கிட்டத்தட்ட அவர் பேசுகையில் குமரி ஆனந்தன் பேசுவது போலவே உள்ளது என்று பலர் கூறியிருக்கின்றனர். கடுமையான விமர்சனங்கள், தனி நபர் தாக்குதல்கள் போன்றவற்றை கண்டு அவர் அஞ்சியதில்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸில் பெரிய பின்னணி இல்லாத நிலையில் அவரின் வளர்ச்சி மற்றும் ஆளுநராக பதவி வகிப்பது என்பதெல்லாம் அசாதாரமான விஷயம் ஆகும்.