ம.பொ.சிவஞானத்தின் 116வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில பாஜக தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ம.பொ.சி. அவர்களது மகள் மற்றும் பேரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


 


இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், 


சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை போற்றுவது எங்களது வழக்கம், அந்த வகையில் ம.பொ. சிவஞானத்தை 116வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக கூறினார். மேலும் நேற்று நடைபெற்ற  பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள்  குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம் எனவும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார். 


மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என  முதலமைச்சரிடம் விசிக சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பஞ்சமி நிலங்களை மீட்கப்பட வேண்டும் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம்,பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று அவர் கூறினார்.


பாஜக நிர்வாகிகள் குறித்து பாலியல் புகார் எழுந்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல் எந்த நிகழ்வும் நடக்க வில்லை எனவும் அது தொடர்பாக தினமலர் நாளிதழுக்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



பாஜக முன்னாள் தேசிய செயலாளர் சட்டமன்றத் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை முறையாக செலவு செய்யாமல் தற்போது காரைக்குடியில் 4 கோடி ரூபாயில் வீடு கட்டி வருவதாக சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஹெச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரிக்கப்படும் என எல்.முருகன் பதிலளித்துள்ளார்.


முன்னதாக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காரைக்குடி சட்டபேரவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வி அடைந்தார். பாஜக கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை எச்.ராஜா செலவு செய்யாமல் வைத்துக் கொண்டதாகவும், நிர்வாகிகளின் செலவுக்கு கூட எச்.ராஜா பணம் கொடுக்கவில்லை எனவும், தான் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று எச்.ராஜாவிற்கு முன்கூட்டியே தெரிந்ததால்தான் கட்சி தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் தற்போது 4 கோடியில் வீடு கட்டி வருவதாக காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் குற்றம்சாட்டி பாஜகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது