தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காஷ்மீர் மாநிலத்தை 370வது அரசியல் திருத்த நீக்கத்தை பற்றியும் அம்மாநிலத்தை மூன்றாகப் பிரித்து சிறு, சிறு துண்டுகளாக பிரித்தது பற்றியும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். 

 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்தும் பாரதிய ஜனதா வாய் திறக்கவில்லை. காரணம் அவர்கள் சர்வதிகாரிகள்.  எல்லா அமைப்புகளையும் அழித்து வருகிறார்கள்.



 

மம்தா பானர்ஜி கட்சியின் ஒரு எம்பியை நீக்கம் செய்திருக்கிறார்கள். காரணம் அதானி பற்றியும், அதானி கம்பெனியை பற்றியும் கேள்வி எழுப்பியதற்காக தான். அவர் ஒன்றும் தேச துரோக குற்றம் செய்யவில்லை. தேசத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவில்லை. அதானியை பற்றி பேசினாலே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவோம் என்ற நிலைக்கு மோடி சென்று இருக்கிறார். மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள். அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை. 

 

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. 40% அதிக அளவு வாங்கி இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கையிலும் எண்ணிக்கை அதிகம். மக்கள் மனதில் ராகுல் காந்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.  2002ல் இதே போன்ற நிகழ்வு அந்த மூன்று மாநிலங்களிலும் நிகழ்ந்தது. அப்போது சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது. ஆனால் 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட மூன்று மாநிலங்களில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று வெற்றி பெற்றோம். நாடாளுமன்றத்தை கைப்பற்றினோம். 



 

தமிழகத்தை பொறுத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாண்டு உள்ளது. 17 மணி நேரம் புயல் சென்னை நகரத்திற்கு மேலே சுழன்று வந்திருக்கிறது. மேக வெடிப்பு போல வெடித்து மழை நீர் பொழிந்து இருக்கிறது எந்த ஒரு நிர்வாகத்தாலும் அவ்வளவு பெரிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாது. ஆனாலும் அரசாங்கம் நன்றாக செயல்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களால் இயன்ற காரியத்தை செய்திருக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் யார் என்று சொன்னால் அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்கள் தான் இயற்கை பேரிடரை எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்ய முடியாது. இது மனித குற்றம் அல்ல, இயற்கை செய்திருக்கின்ற பெரிய செயல். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரிவாக மழை தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள். 6000 ரூபாய் நிதி உதவி வழங்க இருப்பது பாராட்டுக்குரியது. மனிதாபிமான நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் செய்திருக்கிறார் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது.

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவது பாரதிய ஜனதா கட்சியின் வேலையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் சரியாக கேட்டிருக்கிறது. இதன் பிறகு அவர்கள் மாற வேண்டும் காஷ்மீர் விவரத்தை விஷயத்தில் வேறு தவறு செய்து விட்டதாக அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் அது முற்றிலும் தப்பு. நேரு நேரு இல்லை என்று சொன்னால் காஷ்மீர் இந்தியாவோடு இருந்திருக்காது அதுவும் பாகிஸ்தான் போன்று பிரிந்து போயிருக்கும். ஏனென்றால் காஷ்மீரில் இருந்த மக்கள் 99 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அப்பொழுது மவுண்ட் பாட்டன் பிரபு விரும்புகிறவர்கள் இந்தியாவோடு இருங்கள் பாகிஸ்தானோடு இருங்கள் விருப்பமில்லாதவர்கள் தனியாக இருங்கள் என்று தெரிவித்தார். அங்கிருந்த மன்னர் ஹரிசிங் தனித்திருக்கலாம் என்று தெரிவித்தார். ஆனால் அந்த மக்கள் அனைவரும் இந்தியாவோடவே இருக்கவே விருப்பப்பட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசுதான் செய்ய வேண்டும். பீகார் போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.