இதுவரை நடைபெற்ற தேர்தல்களை காட்டிலும் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த சுவாரஸ்சியமானதாவும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கப் போகிறது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மண்டலமும் முக்கிய பணியாற்றபோகிறது என்றாலும் அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக் கொங்கு மண்டலம்தான்.
கோவை மாவட்டத்தை கோட்டையாக்கிய எஸ்.பி.வேலுமணி
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். அதற்கு காரணம் எஸ்.பி.வேலுமணி. திமுக ஆட்சி அமைத்ததும் கொங்கு மண்டலத்தை தங்களின் கோட்டையாக மாற்றும் வேலைகளில் இறங்கியது, கவுண்டர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சக்கரபாணியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக போட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், சக்கரபாணியின் செயல்பாடுகளில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. போதாக்குறைக்கு சக்கரபாணி பொறுப்பேற்ற பின்னர், ஏற்கனவே இருந்த உட்கட்சி பூசல் பன்மடங்கு பெருகி பூதாகரமானது. இதனை விரும்பாத முதல்வர் ஸ்டாலின், கோவையை கவனிக்க செந்தில்பாலாஜியை நியமித்தார்.
வியூகம் அமைத்த செந்தில்பாலாஜி – திமுக கோட்டையாகுமா கோவை
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார் செந்தில்பாலாஜி. சட்டப்பேரவைக்கு தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊர், ஊராக, தெரு, தெருவாக சென்று வேலைப் பார்த்தார். விளைவு, கோவை மாவட்டத்தில் திமுக அமோக வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் செந்தில்பாலாஜியின் பணிகளால் திமுகவே வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் வென்ற அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
என்ன செய்யப்போகிறார் செங்கோட்டையன் ?
இந்நிலையில்தான், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளராகவும் த.வெ.கவில் இணைந்த செங்கோட்டையனுக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறார் விஜய். செந்தில்பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்தான் செங்கோட்டையனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி, ஜெயலலிதா பயணத் திட்டத்தை வகுத்த தளகர்த்தர் என்று அடையாளப்படுத்தப்படும் செங்கோட்டையன், நேரடியாக இந்த மாவட்டங்களில் செந்தில்பாலாஜியை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் மூலம் களப்பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அதோடு, கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் வேலுமணியும் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களையும் சேர்த்து கவனித்து, வெற்றி பெற பாடுபடுவார். நாடாளுமன்ற தேர்தலில் விட்டதை, சட்டப்பேரவை தேர்தலில் பிடித்துவிட வேண்டும் என்று அவரும் அங்கு கங்கனம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்.
கரூர் மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் செந்தில்பாலாஜி மூலம் திமுக வெற்றி பெற்றுவிட்டால் அது தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்திருக்கும் வேலுமணி, தன்னுடைய பணிகளை இப்போதே தீவிரப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.
நேரடியாக மோதும் மூன்று ஜாம்பவான்கள்
இதனால், செந்தில்பாலாஜி, வேலுமணி, செங்கோட்டையன் இடையே நேரடி போட்டி மேற்கு மண்டலத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த மூன்று பேருமே தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, செங்கோட்டையனுக்கு இந்த தேர்தல் என்பது வாழ்வா? சாவா? தேர்தல்.
மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தை இந்த முறை எந்த கட்சி தன்னுடைய கோட்டையாக மாற்றப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.