விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரை அந்த அந்த மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் தொகுதிக்கு வரவேற்பதற்காக உலகநாதன் என்பவர் அடித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக வருகிறது.

Continues below advertisement






இவர்தான் எங்க எம்.பி. – தொகுதிக்கு வரவே போஸ்டர் அடிக்கனும்


அந்த போஸ்டரை எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர் ’இவர்தான் எங்கள் தொகுதி எம்பி. தொகுதிக்கு வருவதற்கே போஸ்டர் அடித்து வரவேற்கும் நிலையில் தான் காங்கிரசாரின் களப்பணி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு அந்த போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.


Worst MP – கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்


அதில், பலரும் மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை பதிவிட்டிருக்கிறார்கள். ’உண்மைதான் அவர் எங்க ஏரியா பக்கமே வந்தது இல்லை, இவர் எப்படி ஜெயித்தார் ?, திமுக கூட்டணிக்காக, இவருக்கு ஓட்டுப் போடவேண்டிய கட்டாயம் Worst MP தொகுதி பக்கமே வர்றது இல்ல, எங்க ஊர்ல தேர்தல் நேரத்துல அவர பாத்தேன், அதுக்கப்பறம் பாக்கவே முடியல, இவரை திமுக உழைத்து வெற்றி பெற வைத்திருக்கிறது. ஆனால், தொகுதி பக்கமே வரமாட்டேன் என்கிறார்’ என விருதுநகரை சார்ந்த சமூக வலைதளங்களில் இயங்கும் பலரும் அவரை பற்றி விமர்சித்துள்ளனர்.






டெல்லியிலேயே முகாம் – கிடைத்த பொறுப்புகள்


ராகுல்காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருக்கு நெருக்கமாக அறியப்படும் மாணிக்கம் தாகூருக்கு ஆந்திரா,அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டியின் வளர்ச்சி, தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் கவனிக்க வேண்டியிருப்பதால், அவரை ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்த தொகுதி பக்கம் அடிக்கடி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


மூன்றாவது முறையாக எம்.பி – கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா?


ஆனாலும் மூன்றாவது முறையாக எம்.பியாகியிருக்கும் மாணிக்கம் தாகூர் தொகுதி மக்களின் தேவையை அறிந்தும் அவர்களது நீண்ட கால குறை, கோரிக்கைகளை தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி, செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் அவருடைய வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினரோடு இணைந்து உழைத்த திமுக உடன்பிறப்புகள்.


குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் மாணிக்கம் தாகூர்


கடந்த 2019 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட, தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை தோற்கடித்தார். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கத் தொடங்கியபோது மாணிக்கம் தாகூரை விட விஜயபிரபாகரனே பல பூத்களில் அதிக வாக்குகளை வாங்கியிருந்தார். தோல்வி முகத்தில் இருந்த மாணிக்கம் தாகூர், கடைசியில் 4 ஆயிரத்து 379 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார்.


திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் மாணிக்கம் தாகூர் மட்டுமே. அதற்கு காரணம், சமூக வலைதளங்களில் விமர்சித்திருப்பது மாதிரி, ஜெயித்த பின்னர் டெல்லிக்கு சென்றுவிடுவதும், தொகுதி பக்கம் அதிகம் வராமல், வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றாமல் இருந்ததும்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.