பாஜக ராமர் கோவில் ஆன்மீக தளத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது மக்களைப் பிரிக்கின்ற முயற்சியாக உள்ளது. பாராளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி அவசர அவசரமாக செய்கிறது. இது மக்களிடத்தில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேட்டிளித்தார்.


 


 




 


கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும். அதேபோன்று அரவக்குறிச்சி பகுதியில் விளையும் முருங்கைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. விவசாயம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே முருங்கை பவுடர் தொழிற்சாலையை தொடங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். 


 


 




கரூர் மாவட்டத்தில் ஜவுளி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை ஜவுளி தொழிலை பாதுகாப்பதற்காக பிரதமர் மற்றும் அமைச்சர் இடத்தில் பேசி ஒரு தீர்வை காண வேண்டும். அண்ணாமலை நடை பயணத்தில் கருத்துக்கள் மற்றும் குறைகளை கூறினால் மட்டுமே அரசியலாகாது. அண்ணாமலை சொந்த ஊரில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 


 




 


பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளோடு நாம் போட்டி போட்டுக் கொண்டு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. எனவே ஒன்றிய அரசினுடைய கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். அண்ணாமலை எப்போது வேண்டுமானாலும்  பிரதமர் இடம் பேச முடியும் என்று சொல்கிறீர்கள் ஏன் ஜவுளி தொழிலை பற்றி பேசி தீர்க்கக் கூடாதா?. ஜவுளி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது உங்களுக்கு தெரியவில்லையா?. எனவே ஆக்கப்பூர்வமாக ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமர் கோவில் என்பது ஒரு ஆன்மிக ஸ்தலமாக  அரசியலை புகுத்தாமல் செய்திருந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், அதனை பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்வது என்பது மக்களை பிரிக்கும் நோக்கமாகும். அதேபோல் அவசர அவசரமாக பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஏற்பாடுகளை செய்வதுதான் மக்களிடத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமர் கோவிலை பொறுத்தவரை அதில் எப்போதுமே அரசியல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய அரசியல் என்பது ஒரு ஆக்கபூர்வமான அரசியல், ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது நாங்கள் அல்ல. அதனை யாரும் பயன்படுத்தாமல் இருந்தால்  நன்றாக இருக்கும் என்று கூறினார்.