தமிழ்நாட்டை பாஜக எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதன் வெளிப்பாடு தான், பிரதமர் மோடியின் அடுத்தடுத்த வருகை என வேல்முருகன் தருமபுரியில் பேட்டியளித்தார்.
தருமபுரியில் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் வேல்முருகன்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகவாழ்வுரிமை கட்சியில் புதியதாக இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைகின்றனர். சாதி, மத எல்லைகளைக் கடந்து எதிர்கால தமிழ் சமூகத்தின் வாழ்வுரிமைக்காக களமாடி வருகிறது. கடந்த மூன்று தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று பயணிக்கிறோம். பெரிய கட்சி கூட்டணியில் இடம் கொடுத்து அரவணைத்து செல்ல கூடிய பொறுப்பு அவர்களிடம் தான் உள்ளது. சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிப்பது போல நாடாளுமன்றத்தில் தமிழக வாழ்வு கட்சியின் குரல் ஒலிக்கும், அதனால் போட்டியிட வாய்ப்புகளை கேட்போம். அது தருமபுரி, கடலூர், கன்னியாகுமரி, சேலம், எந்த தொகுதி என தீர்மானிப்பது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தான் முடிவு செய்யும்.
ஆளுநர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவார், வள்ளலாரை சனாதனத்தின் தலைவர் என்று சொல்லுவார், தமிழ்நாட்டை, தமிழகம் என சொல்வார். இதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தகுதி இல்லாத நபர் ஒருவர் தமிழகத்தின் ஆளுநராக இருக்கிறார். அவர் பதவியை விட்டு உடனடியாக விலக வேண்டும்.
மாநில அரசு பதவிகளில் 100% தமிழகத்தை தாயகமாக கொண்ட தமிழர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் . மத்திய அரசு பதவிகளில் 90 சதவீதம் அந்தந்த மாநில த்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90% வழங்க வேண்டும். மீதமுள்ள 10 சதவீதத்தை மற்ற மாநிலத்திற்கு வழங்க வேண்டும். இங்கு 90% வேலை மற்ற மாநிலத்தவருக்கும், 10% வேலை அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. தொழில் வர்த்தகம் வணிகம் போன்றவற்றில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு ஒரு கலப்பினம் மாநிலமாக மாறும் தமிழனுடைய மொழி அழியும் தமிழனுடைய பண்பாட்டிற்கு சீரழிவாக மாறும்.
பிரதமர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வருவது அவர்கள் தமிழ்நாட்டை கைப்பற்ற வேண்டும் என குறி வைக்கிறார்கள். மதத்தின் பெயரால், பெரும்பான்மை இந்து மக்களை ஒன்று திரட்டி பாஜக கால் உண்ற வேண்டும் என முயற்சிக்கிறார்கள். கடுமையாக முயற்சி எடுத்து வருகிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடுத்தடுத்து வருகை இருந்து வருகிறது. ஒன்றிய அமைச்சர்கள் அரசின் திட்டங்களை ஆங்காங்கே ஆய்வு செய்வது, மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் ஏதோ ஒரு பகுதியில் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருவது, இதெல்லாம் பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செய்து வருகின்றனர். சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.