கடந்த சில தினங்களுக்கு முன்னர்  திமுக எம்.பி திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. அவ்வாறு செய்தது திமுக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் என கூறப்பட்டது.


அதன் பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற திருச்சி சிவா ஆதரவாளர்களை காவல் நிலையத்திற்குள் சென்று நேருவின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்பட்டது.


இந்நிலையில், திருச்சி கண்டோன்மென்ட் SBI காலனி பகுதியில் உள்ள திருச்சி சிவா இல்லத்துக்குச் சென்ற தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, சிவாவை நேரில் சந்தித்துப் பேசினார். இதற்கு திமுக தலைமை காரணம் என்று கூறப்படுகிறது. 


இந்த சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியதாவது,


அமைச்சர் கே.என். நேரு: 


தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கக்கூடாதது நடந்து விட்டது. நான் தஞ்சை மாவட்ட நிகழ்ச்சிக்கு சென்ற போது தான் தகவல் வந்தது. காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். வழக்கு பதிவு செய்துள்ளார்கள், ஆட்களை தேடிக்கொண்டு உள்ளார்கள் என சொன்னார்கள்.  நான் சிவா வந்து விட்டாரா  எனக் கேட்டேன். நடக்கக்கூடாதது நடந்து விட்டது. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதலமைச்சர் என்னை தொடர்பு கொண்டு இருவரும் திருச்சியில் திமுகவை கட்டிக் காக்கிறவர்கள். இருவருக்கு இடையில் எந்த விதமான பிரச்சனை இருக்க கூடாது. அதை சரி செய்து விட்டு அதனை நாட்டு மக்களிடம் கூறுங்கள் என கூறினார். மேலும், பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல் பட்டுவரும் அவருக்கு இது போன்று நடந்தது அவமதிப்பு. இது கழகத்திற்கும் நல்லது இல்லை எனவும் முதலமைச்சர் கூறினார். அதன்படி, நாங்கள் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசினோம் என அமைச்சர் கே.என். நேரு பேசினார். 


 


அதன் பின்னர் பேசிய மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, 


நடந்தது நடந்தாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதலமைச்சர் மிகவும் பொறுப்புடன் இந்த நாட்டை ஆட்சி செய்து வருகிறார். அவருடைய மனம் சங்கடப்படும் படி நடந்து கொள்ள கூடாது என நாங்கள் மிகவும் கவனத்துடன் இருக்கின்றோம். நடந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் நேரு என்னிடம் கூறினார். நாங்கள் இருவரும் சில விஷயங்கள் பேசினோம். அமைச்சர் தனக்கு இதில் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனக் கூறினார். நான் அதைக் கேட்டுக் கொண்டேன். எங்களைப் பொறுத்த வரையில் கழக வளர்ச்சி என்பது முக்கியம். அவர் (நேரு) செய்கின்ற தொண்டினை நான் செய்ய முடியுமா என்றால் அது முடியாது. நான் செய்கின்ற பணிகளை அவர்கள் (நேரு) பாராட்டுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் கழக வளர்ச்சி தான் முக்கியம். வருங்கால நாட்களில் கழகத்தின் வளர்ச்சிக்காகவே எங்களுடைய பணிகள் இருக்கும். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூறினார்.