துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 


கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியாகிறது. 


இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜனவரி 7) அன்று வெளியாகி இளம் தலைமுறையினர் முதல் அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த காதல் கதை ஒரு முக்கோண காதல் கதையாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 


இந்நிலையில், படத்தின் இயக்குநர் கிருத்திகா கூறுகையில், ”காதலிக்க நேரமில்லை படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.  ட்ரைலர் வெளியிட்டுள்ளோம். ஏ.ஆர். இசையமைத்துள்ளார். நல்ல இருக்கும். எல்லாருக்கும் நன்றி. அப்போது காதலிக்க நேரமிருந்தது. இப்போ யாருக்கும் நேரம் இல்லை. எல்லாரும் பயங்கர பிஸியாக இருக்கிறோம். காதலிக்க நேரமில்லை என படம் பெயர் வைத்தாலும் காதல் குறித்துதான் பேசியுள்ளோம். காதல் இல்லாமல் எதுவும் இல்லை. அது சந்தோஷத்தையும் கொடுக்குது, சின்ன கஷ்டத்தையும் கொடுக்குது என்று தான் படத்தில் பேசியுள்ளோம். நான் படம் எடுக்க டைம் எடுக்கிறது. கதையை யோசித்து அதை எடுத்து வெளியிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட டைம் தேவை படுகிறது. அதைத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து உதயநிதி அரசியல் வாழ்க்கையில் பிஸியாக உள்ளார். அவரைவைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு பதிலளித்த கிருத்திகா, “ஏன் இப்படி? போலாமே, அது முடிந்து போன கதை. அதை இப்போ பேசிட்டு இருக்கீங்க. அவரை வைத்து படம் இயக்க வேண்டும் ஆசையெல்லாம் இல்லை” என தெரிவித்தார்.