டெல்லி சட்மன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி என்ன ஆகும்.? பாஜகவை காப்பாற்றுமா மோடியின் பிரசாரம்.? காங்கிஸின் கணக்கு என்ன.? பார்க்கலாம்.


டெல்லியில் மும்முனைப் போட்டி...


டெல்லியில், பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில், சட்டமன்ற தேர்தல்   பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், அங்கு அரசியல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை இணைந்த சந்தித்த ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், சட்டமன்ற தேர்தலை தனித்தனியே சந்திக்கின்றன. அவர்களின் இந்த பிரிவால், மத்தியில் ஆளும் பாஜக இந்த முறை கடும் போட்டியை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.


என்ன ஆகும் ஆம் ஆத்மி.?


டெல்லியில் நான்காவது முறையாகவும், தனியாக மூன்றாவது முறையாகவும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடும் ஆம் ஆத்மி கட்சி, அமலாக்கத்துறையின் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைதானதும், ஆம் ஆத்மியிலிருந்து மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பாஜகவிற்கு சென்றதும் சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும், மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் இண்டியா கூட்டணியில் இணைந்து படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இண்டியா கூட்டணியை கழற்றிவிட்டு, தனியாக சட்டமன்ற தேர்தலை சந்திப்பது, மக்களிடையே அக்கட்சிக்கு பலமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்ற கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், தனது ஆதரவாளர் அதிஷியை முதல்வராக்கி, தனது பதவியை துறந்த கெஜ்ரிவாலே, அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அமலாக்கத்துறை வழக்கின் தீர்ப்பு வரும் வரை, அவர் முதல்வராக வருவது சற்று கேள்விக்குறிய விஷயம்தான். எனினும், தாங்கள் வென்றால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளது அவரை காப்பாற்றுமா அல்லது 10 வருடங்களாக எதிரிகளை அண்டவிடாமல் பெரும்பான்மையை பெற்றுவந்த ஆம் ஆத்திமிக்கு, அவர் சிறை சென்று வந்தது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா என பார்க்கலாம்.


பாஜக-வின் வெற்றிக்கு உதவுமா மோடியின் பிரசாரம்.?


டெல்லியில் 1998ம் ஆண்டு ஆட்சியை இழந்த பாஜக, அதன் பிறகு அங்குள்ள மக்களின் ஆதரவை பெற திணறி வருகிறது. காங்கிரஸ், அதன் பிறகு ஆம் ஆத்மி கட்சிகள் கோட்டையை பிடித்த நிலையில், இன்றுவரை பாஜகவால் தலைதூக்க முடியவில்லை. இந்த நிலையில், தற்போதைய சூழலில், கடந்த முறை பிரசாரங்களில் மோடியுடைய சாதனைகள் மட்டுமே முன்வைக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடியும் தற்போது மக்களிடையே பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆம் ஆத்மி ஆட்சியில், எங்கும் எதிலும் ஊழல் செய்து, டெல்லியையே அக்கட்சி சீரழித்துவிட்டதாக கூறி வருகிறார். தலைநகரை உலகத் தரத்திற்கு உயர்த்த, பாஜக-வால் மட்டுமே முடியும் என்பதால், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு அவர் பரப்புரை செய்து வருகிறார். பாஜக சார்பில், முதல்வர் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், பிரதமர் மோடியின் பேச்சு மக்களிடையே எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாஜக வெல்லும் பட்சத்தில், டெல்லியில் செல்வாக்கு மிக்க பாஜக பெண் தலைவர்கள் மீனாட்சி லேகி அல்லது ஸ்மிதி இரானி முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


காங்கிரஸின் கணக்கு என்ன.?


மறுபுறம், காங்கிரஸ் கட்சியும், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயேதான் டெல்லியில் களம் காண்கிறது. எனினும், புது டெல்லி தொகுதியில், கெஜ்ரிவாலை எதிர்த்து டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தை வேட்பாளராக களமிறக்கியுள்ளது காங்கிரஸ். தங்களுடைய பிரசாரத்தில், ஆம் ஆத்மி கட்சியையும் கடுமையாக சாடி வருகிறது காங்கிரஸ். ஒன்றாக மக்களவை தேர்தலை சந்தித்த இரு கட்சியினரும், ஒருவரை ஒருவர் சாடி, சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்வது, பொதுமக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதையும் மறுக்க முடியாது. ஆனால், சமீப காலங்களில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, இந்திய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. இளம் தலைமுறையினர் விரும்பும் தலைவராக அவர் இருப்பது, டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதமான சூழலை உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மொத்தத்தில், இந்த முறை டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது மூன்று கட்சிகளுக்குமே பெரும் சவால்தான் என்பதே கள நிலவரம்.


இதையும் படிக்கவும்: Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!