Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல், வரும் 10ம் தேதி தொடங்க உள்ளது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:


கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்தித்தது. இதில், திமுக 125 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, உடல்நலக்குறைவால் அவர் திடீரென காலமானார். அதைதொடர்ந்து 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரும் சோகமாக உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் அவரும் காலமானார். இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இரண்டாவது முறையாக, இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள்:



  • வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் - 10.01.2025

  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 17.01.2025

  • வேப்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - 20.01.2025

  • வாக்குப்பதிவு - 05.02.2025

  • வாக்கு எண்ணிக்கை - 08.02.2025


வேட்புமனு தாக்கல் செய்ய எத்தனை நாள் அவகாசம்?


தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கானவேட்புமனு தாக்கல்,  வரும் 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும். ஆனால், அரசு விடுமுறைகளை கருத்தில் கொண்டால், 8 நாட்களுக்கு பதிலாக வெறும் 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 13ம் தேதி போகி பண்டிகை தொடங்கி பொங்கல்,மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நாட்களில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும், மீதமுள்ள 10, 11 மற்றும் 17ம் தேதி என, 3 நாட்களில் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் பல கட்சிகளில் வேட்பாளர்களே தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நான்கு முனைப்போட்டி:


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸே போட்டியிடும் என கூறப்படுகிறது. அதன்படி, அக்கட்சி சார்பில் ஈவிகேஸ் இளங்கோவனின் மற்றொரு மகனான சஞ்சய் சம்பத் அல்லது மக்கள் ராஜன் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக அதிமுக, நாதக மற்றும் பாஜகவும் இடைத்தேர்தலில்போட்டியிட வாய்ப்புள்ளது. அதேநேரம், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இதனிடையே, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.