கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்தியதற்கு கேள்வி எழுப்பினால், பாட்டில் மெட்டு சரியில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக எம்.பி ஜோதிமணி கரூரில் பேட்டியளித்தார்.
ராகுல் காந்தி குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்ய வைத்த மத்திய அரசைக் கண்டித்து கரூா் மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சம் வீடுகளில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ என்ற ஸ்டிக்கா் ஒட்டும் பிரசாரம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக கரூா் எம்.பி ஜோதிமணி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தலாடம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் ‘எனது வீடு ராகுல் வீடு’ ஸ்டிக்கரை ஒட்டி பிரசாரத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து காந்திகிராமம் வெங்கமேடு ஆகிய பகுதிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கரூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. கரூர் மாநகராட்சி ஆக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வழங்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. விரைவில் கரூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலமாக குடிநீர் பிரச்சினை மட்டும் இன்றி, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் பணியை தொடங்கியுள்ளது. தற்போதைய கர்நாடக அரசாங்கம் மாநிலம் முழுவதும் 40% கமிஷன் பெரும் அரசாங்கமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் ஊழலை தாங்கிக் கொள்ள முடியாமல் பல ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை இருக்கிறது. 150 இடங்களை கைப்பற்றி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறும்.
கர்நாடக தேர்தலில் பாஜக பணத்தை கொட்டுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் கர்நாடகா முழுவதும் பயணித்து பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக அமைச்சர் ஒருவர் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்திவிட்டு, கன்னட கீதத்தை ஒலிக்க செய்கிறார். ஒரு தமிழராக உள்ள அண்ணாமலை அதை கண்டும் காணாமல் இருக்கிறார். இது குறித்த கேள்வி எழுப்பினால் அந்தப் பாடலில் மெட்டு சரியில்லை என்று காரணம் கூறுகிறார் என்று எம்.பி ஜோதிமணி பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்