தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.


சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதால் அவரது மகள் சுப்ரியா சுலே அல்லது மருமகன் அஜித் பவார் கட்சியின் தலைவராக வாய்ப்புள்ளது. 82 வயதாகும் சரத்பவார், 4 முறை  மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். 


இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவாரும் முக்கியமானவர். இவர்1958-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலில்  உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரிவுகளின்போது சரத் பவார் என்கிற பெயரும் அடிபட்டுக்கொண்டே  இருந்தது. இவர் மகாராஷ்டிரா மாநில முதல்வராக 4 முறை பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.


1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் நீண்ட காலம் தனிக்கட்சியை தக்க வைத்துக் கொண்டவர்களில் சரத் பவார் குறிப்பிடத்தக்கவர். அதன் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து, காங்கிரஸ் கட்சிக்கு  நட்பு சக்தியாகவும் இருந்து வருகிறார்.  2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த அணியை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திடீரென சரத்பவார் தாம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில்  பரபரப்பையும் விவாதத்தையும் எழுப்பி  உள்ளது.


தேசியவாத காங்கிரஸ் கட்சி எப்போது உருவானது?


தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக திகழ்கிறது. சரத் பவார், பி. ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் இத்தாலியில் பிறந்ததாக சோனியா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதனால் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட இந்த மூன்று பேரும், 1999 -ஆம் ஆண்டு மே மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.


மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிஸ் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உடன் நெருக்கமடைந்ததை தொடர்ந்து சரத்பவாருடன் ஏற்பட்ட வேறுபாடுகளால் பி. ஏ. சங்மா 2004-ல் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். பின்பு 2005 ஆம் ஆண்டில் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.


2004 பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட இக்கட்சி 9 தொகுதிகளை வென்றது. 2004-ல் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கமாக உள்ள இந்த கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் பங்கு வகித்து வந்துள்ளது குறிப்பித்தக்கது.