கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி நில மோசடி வழக்கில், அவருடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட  பிரவீன் என்ற இளைஞரும், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் காலை, மாலை என இரு வேலை கையெழுத்திட்டு வருகிறார்.



இந்த நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்ட பிரவீன் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை ரெட்டிபாளையம் அருகில் காரை நிறுத்திவிட்டு தேனீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீனை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.


 


 




அந்த சம்பவத்தை கண்டு அப்பகுதியில் அதிகளவு மக்கள் கூடியதால், தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அதில் ஒரு நபரின் செல்ஃபோன் கீழே விழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காயமடைந்த பிரவீன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரவீன் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.



குறிப்பாக 100 கோடி நில மோசடி சம்பந்தமாக புகார் அளித்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளான பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார். பிரவீன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பிரவீன் இந்த சம்பவம் குறித்து தனது தரப்பு வழக்கறிஞர் கரிகாலனுடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின்னணியாக பிரகாஷ் இருப்பதாக பேசிய அவர், சிபிசிஐடி வழக்கு குறித்தும் பிரகாஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.